கிளாந்தான், கோத்தா லாமா சட்டமன்றத் தொகுதிக்குப் பி.எஸ்.எம். குறிவைத்துள்ளது

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர்கள் கிளாந்தானிலும் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது.

துரதிஸ்டவசமாக, டிஏபி-ஐப் போலவே, கோத்தா லாமா சட்டமன்ற தொகுதியையே பி.எஸ்.எம். கட்சியும் குறிவைத்திருக்கிறது. கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் 3 சட்டமன்றங்களில் கோத்தா லாமாவும் ஒன்றாகும்.

எதிர்வரும் அக்டோபர் 14-ல், பி.எஸ்.எம். அதன் வேட்பாளரை அறிமுகம் செய்யவுள்ளதாக, கிளாந்தான் பி.எஸ்.எம். தலைவர் கைரூல் நிஷாம் அப்துல் கானி தெரிவித்தார்.

தற்போது நாட்டின் பல பகுதிகளில், ’14-வது பொதுத் தேர்தலை நோக்கி பி.எஸ்.எம்.’ எனும் கருப்பொருளுடன் பி.எஸ்.எம். ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தி வருவது தெரிந்ததே.

இவ்வார இறுதியில், அப்பிரச்சார இயக்கம் கிளாந்தான் மாநிலம் செல்லவுள்ளது. அப்பிரச்சாரத்தின் ஊடே நடைபெறவுள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பில், வேட்பாளர் அறிவிப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் சார்பில், அத்தொகுதியில் தாங்கள் போட்டியிடவுள்ளதாக டிஏபி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஹராப்பான் உறுப்புக் கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீடு விவாதம் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதால், இது இறுதி முடிவு அல்ல.

பாரம்பரியமாக பாஸ் மற்றும் பாரிசான் நேசனல் மட்டுமே போட்டியிட்டு வரும் அத்தொகுதிக்கு, இம்முறை டிஏபி மற்றும் பி.எஸ்.எம். போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளன.

தற்போது, பாஸ் கட்சியைச் சேர்ந்த அனுவார் தான் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினாராக இருக்கிறார். ஒருவேளை, பி.எஸ்.எம். தனது வேட்பாளரை அங்கு நிறுத்தினால், கோத்தா லாமா தொகுதி 4 முணை போட்டியைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

அனுவார் தான் அப்துல்லா, நான்காவது முறையாக அச்சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். மேலும், கிளாந்தான் சட்டமன்றத்தில் இருக்கும், ஒரே ஒரு மலாய் அல்லாத சட்டமன்ற உறுப்பினரும் அவர் ஆவார்.

இதற்கிடையே, மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, வேட்பாளர் அறிவிப்பை பி.எஸ்.எம்.-ன் தலைமைத்துவம் செய்யும் என கைரூல் நிஷாம் தெரிவித்தார்.

“எங்களின் வேட்பாளர், கடந்த 5 ஆண்டுகளாக அத்தொகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்,” என்று அவர் தெரிவித்தார்.