செந்தமிழ்ச்செல்வியின் வழக்கு: நஜிப்பும் ரோஸ்மாவும் தற்காப்பு வாதத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டனர்

காலஞ்சென்ற பி. சுப்ரமணியத்தின் துணைவியார் எ.  செந்தமிழ்ச்செல்வி தொடர்ந்துள்ள வழக்கில் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா ஆகிய இருவரும் அவர்களுடைய தற்காப்பு வாதத்தை 14 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் இதர பிரதிவாதிகளுக்கும் அதே உத்தரவை நீதிபதி ஹியு சியு கெங் பிறப்பித்தார். அவர்களில் நஜிப்பின் இரு உடன்பிறப்புகள், மூத்த வழக்குரைஞர் சிசில் ஆப்ரகாம், வணிகர் தீபக் ஜைகிஷன் ஆகியோரும் அடங்குவர்.

நஜிப்புக்கு எதிரான ஒரு வழக்கில் அவர் தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது இதுதான் முதல்தடவை

செந்தமிழ்ச்செல்வியின் வழக்கைத் தவிர்த்து, நஜிப்புக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றம் தடையை வழங்குவதற்கு பிரதிவாதிகள் இவ்வழக்கு சம்பந்தமான சிறப்பு சூழ்நிலைகளை முன்வைக்கவில்லை என்று நீதிபதி ஹியு கூறினார்.

மேலும், தடை வழங்குவது செந்தமிழ்ச்செல்வி மற்றும் அவரது குழந்தைகள் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு தடையாக இருக்கும் என்று நீதிபதி கூறினார்.

கோபால் ஶ்ரீராம், அமெரிக் சிங் சிது மற்றும் சைட் இஸ்கந்தர் சைட் ஜாபார் ஆகியோர் செந்தமிழ்ச்செல்வியையும் அவரது மூன்று குழந்தைகளையும் பிரதிநிதித்தனர்.