ஐ.நா நிபுணர்களின் பரிந்துரைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா சிறப்பு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்  நேற்று சிறிலங்கா வந்துள்ளார்.

இவரது பயணம் தொடர்பாக, ஊடகங்கள் பலவற்றில் வெளியிடப்பட்டுள்ள தவறான தகவல்கள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“ஐ.நா சிறப்பு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால், சிறப்பு அறிக்கையாளர்களின் அனுபவம் மற்றும் ஆற்றலை, அரசாங்கங்கள் ஒரு வளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆற்றலைக் கட்டியெழுப்புதல், கொள்கை வகுப்பு, கொள்கை மறுசீரமைப்பு, பயிற்சி தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் தேவைப்பட்டால், ஐ.நா நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் நிபுணத்துவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சிறிலங்காவில் பதவியில் இருந்த அரசாங்கங்கள், சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக, கருத்துக்கள் மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுபோன்ற சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

பப்லோ டி கிரெய்ப், குறிப்பிட்ட ஒரு விடயத்தில் சுதந்திரமான ஒரு நிபுணர். சிறப்பு அறிக்கையாளர்கள், மனித உரிமைகள்  தொடர்பாக, ஒரு விடயம் சார்ந்து அல்லது, நாட்டின் அணுகுமுறை சார்ந்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை கூறும், அறிக்கை சமர்ப்பிக்கும் ஆணை பெற்றவர்கள்.

சிறப்பு அறிக்கையாளர் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறையை பின்பற்றுவர். பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறை என்பதன் அர்த்தம், மோதல் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரையுமே குறிக்குமே தவிர, ஒரு சமூகத்தையோ, குழுவையோ  அல்ல.

அவரது பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் சிறிலங்கா மக்களுக்குப் பயனளிக்குமா என்பதையும், அவரது  ஆற்றல் , நிபுணத்துவம், ஆலோசனை, என்பனவற்றை மேலும் பெறுவது குறித்தும் சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்கும்.” என்றும் அந்த அறிககையில் கூறப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: