எம்பிபிஜே: ஹரப்பான் பேரணி நடத்த திடலைக் கொடுப்பதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை

 

போலீஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், பாடாங் திமோரை ஹரப்பான் அதன் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு பேரணிக்கு பயன்படுத்த பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) அனுமதி அளித்துள்ளது.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள திடலை ஹரப்பான் அதன் பேரணிக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன் போலீஸ் அனுமதி தேவையில்லை என்று பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் அசிஸி முகமட் ஸைன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

போலிஸ் நேற்று இதற்கு பகிரங்க ஆட்சேபம் தெரிவித்தது. அதற்காக எம்பிபிஜே அதன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையில்லை என்றாரவர்.

போலிஸ் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் எம்பிபிஜே அக்டோபர்பெஸ்ட் நிகழ்ச்சியை ஒரு பிஜே பேரங்காடியில் நடத்த அனுமதி மறுத்தது இதிலிருந்து வேறுபட்டதாகும் என்று அவர் கூறினார்.

அக்டோபர்பெஸ்ட் விவகாரத்தில் எம்பிபிஜே வேறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அது வணிக அனுமதியின்கீழ் வருகிறது. அதற்கு போலிஸ் அனுமதி தேவைப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அக்டோபர்பெஸ்ட் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தோம், ஏனென்றால் அதற்கு போலிஸ் அனுமதி அளித்திருந்தது.

இவ்வாண்டு, போலிஸ் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. “அதன் காரணமாக நான் அந்த நிகழ்ச்சியை ஒரு பேரங்காடியில் நடத்த அனுமதிக்கவில்லை”, என்று மேயர் கூறினார்.

பேரணியைப் பொறுத்தவரையில், அதன் ஏற்பாட்டாளர்கள் போலிஸ் மற்றும் எம்பிபிஜே ஆகிய இரண்டையும் கையாள வேண்டியுள்ளது.

திடலின் சொந்தக்காரர் என்ற முறையில் அதைப் பயன்படுத்த ஹரப்பானுக்கு எம்பிபிஜே அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், பேரணியை நடத்துவதற்கு அவர்கள் போலிஸை சமாளிக்க வேண்டியுள்ளது.

பேரணியின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு எம்பிபிஜே அதன் அதிகாரிகளைப் பயன்படுத்தும். ஆகவே, மக்களுக்கு எந்தச் சிரமமும் இருக்காது என்றாரவர்.