மாயநிலை வாழ்வு

கி. சீலதாஸ், அக்டோபர் 13, 2017.

சமயம்,  அரசியல்,  சமயக்  கல்வி,  சமய  அரசியல், அரசியல்  சித்தாந்தம்,  செழுமையான  பொருளாதார  நிலை  போன்றவை  மனிதனை  எந்த  இலக்குக்குக்  கொண்டு  செல்கிறன?   ஆழ்ந்து  சிந்திக்க  வேண்டிய   விஷயம்.  சமயமும்,  சமயக்  கல்வியும்  ஒருவனின்  மனத்தில்  பதிந்து  கிடக்கும்  பாசிப்பிடித்த  மூர்க்க  எண்ணங்கள்  வளர்வதைத்  தடுக்க  உதவும்  என்பது  பொதுவான  கருத்து.  பிறக்கும்  குழந்தைக்கு   மூர்க்கக்  குணம்  எழுவதற்கான  சாத்தியக்  கூறுகள்  குறைவே.  ஆனால்,  குழந்தை  வளர்க்கப்படும்  முறையில்தான்  மூர்க்கத்  தனத்தை  தனது   பிரம்மாஸ்த்தரமாக  நம்புகிறது.  இப்படிப்பட்ட  பயங்கரமான  எண்ணங்களோடு  வளர்க்கப்படும்  குழந்தை  நாளாவட்டத்தில்   சமுதாயத்திற்கும்  நாட்டுக்கும்  தீங்கு  விளைவிக்கும்  சக்திகளோடு  இணைந்து  அழிந்து  போவதுமட்டுமல்ல,  பிறரை  அழிக்கவும்  செய்யும்.  சமயக்  கல்வியும்,  அத்தோடு  அரசியலும்  கலந்துவிட்டால்  ஒருதலையான  சமய  நெறிக்கு  முக்கியத்துவம்  அளித்து  பிற  சமயங்களை  சாதுர்யமான  முறையில்  அழிக்க  ஆயத்தமாகிவிடுவதையும்  காண்கிறோம்.  இந்தப்  போக்கில்  மூர்க்கத்தனம்  உயர்ந்த  நிலையை  அடைந்துவிடுகிறது.  சமயப்  போதகர்கள்   நம்மை  சிந்திக்கும்படி  சொல்வது  அபூர்வம்.  அவர்கள்  சொற்படி  நடந்தால்  போதும்.

அரசியல்  கோட்பாடும்  கண்மூடித்தனமான  ஒரு  கொள்கையைப்  பின்பற்ற  விழைகிறதேயன்றி ஆய்ந்து  பார்த்து  எது  ஏற்புடையது,  எது  ஏற்புடையது  அல்ல  என்ற  ஆய்ந்து  பார்க்கும்  ஆற்றலை  மரிக்கச்  செய்கிறது  என்கின்ற  உண்மையை  உணராமலேயே  செயல்படுகிறோம்.

நம்மை  சிந்திக்கச்  சொல்லும்  அரசியல்  தலைவர்கள்  எப்படிப்பட்ட  சிந்தனையை  மேற்கொள்ளும்படி  வலியுறுத்துகிறார்கள்?  அவர்களின்  கருத்தை  ஏற்றுக்கொள்ளும்படி  சொல்லுவார்கள்.  மற்றவர்கள்  கருத்தில்  சோடை  காணும்  தலைவர்கள்  தங்களின்  கொள்கையில்  இருக்கும்    பலவீனத்தைப்பற்றி  கவலைப்படமாட்டார்கள்.  இதையெல்லாம்  சிந்திக்கும்போது,  அரசியல்  கட்சி  தலைவர்கள்  தங்களின்  சுயநலத்தை  அடிப்படையாக  வைத்து  தம்மை  பின்பற்றுவோரை  கவர்ந்து  அடிமைகளாக்கி  விடுகிறார்களேயன்றி  மக்களை  சிந்திக்கும்  ஆற்றல்  உடையவர்களாக  உருவாக்காதது  ஒரு  பெரும்  குறையே.  அரசியல்  தலைவர்கள்,  அவர்களைப்  பின்பற்றோவோரின்  அடிப்படை  நோக்கமே  மக்களைக்  கவர்ந்து,  அதை  வைத்து  அதிகாரத்தைக்  கைப்பற்றுவதுதான்.  கிடைத்த  அதிகாரத்தை  வைத்து  எதிர்தரப்பினரை  அழிப்பதில்தான்  கவனம்.

செழுமையான  வாழ்க்கை  நிலை  சிந்திக்கும்  ஆற்றலை  பலவீனமாக்கிவிடுகிறது.   செழுமையை  அடந்துவிட்டவர்கள்  அதைப்  பாதுகாக்கவும்  செழிப்பு  மேலும்   மேலும்  மேன்மை  அடைய  பிரார்த்திக்கிறார்களேயன்றி மனத்தில்  ஏற்படுத்தப்பட்டிருக்கும்  சமயம்  அல்லது   அரசியல்  சிந்தனை  தடைகளை  நீக்கி,  மனிதனாக  வாழ  நினைக்காதது  ஆச்சரியமான  நிலை  அல்லவா?  மனிதனாக  வாழ  ஒரே  ஒரு  மனநிலை  போதும்.  யாரையும்  வெறுக்காத,  எதையும்  பகைக்காத  மனநிலை.  அதாவது,  உனக்கும்   உன்  விருப்ப  நிலைக்கு  இடம்  இருக்கும்  போது  மற்றவர்களுக்கு  அதே  உரிமை  உண்டு  என்பதை  உணர்ந்து  வாழ்தல்.  பிறரை  உன்  வழிக்கு  வற்புறுத்தாத  மனப்பாங்கு.  என்னவாக  இருக்கும்?

சமயம்  என்றால்  தங்கள்  சமயம்தான்  சிறப்பானது  என்று   நயமாகப்  பேசுவது  பலவித  சலுகைகள்  பெறமுடியும்  என்று  உறுதியளிப்பது.  அரசியலும்  மாறுபட்ட  நிலையைக்  கொண்டிருக்கவில்லையே.  அரசியல்  அதிகாரத்துக்காகப்  போராடும்  அரசியல்வாதி  ஊழல்  செய்கிறான்.  கடவுளிடம்  பேரம்  பேசும்  சமயவாதிகளுக்கும்  மக்களிடம்  பேரம்பேசும்  அரசியல்வாதிகளுக்கும்  என்ன  வித்தியாசம்?   இவ்வுலகைவிட  வேறு  உலகம்  ஏதும்  இல்லை.  இதை  உணர்ந்தவன்  மனிதன்.  சுருக்கமாகச்  சொன்னால்  மாயநிலை  வாழ்வை  தள்ளிவைத்துவிட்டு  உண்மையான  மனித  வாழ்க்கையை  மேற்கொள்வதே  பிறப்பின்  பலன்.