மணிவண்ணன் : தீபாவளிக்குச் சிலாங்கூர் மாநிலத்தில் 2 நாள்கள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்

2017 தீபாவளிக்கு, 2 நாள்கள் பொது விடுமுறையை சிலாங்கூர் மாநில அரசு வழங்க வேண்டும் எனும் சில இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களின் கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாக, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர், ஜி.மணிவண்ணன் கூறியுள்ளார்.

“இதற்கான அனுமதியைப் பெற சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபூடின் இட்ரீஸ் ஷா அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச் செல்ல வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

“சிலாங்கூர் மந்திரி பெசார், அஸ்மின் அலி இந்தக் கோரிக்கைக்கு கவனம் செலுத்துவார் என நான் நம்புகிறேன்,” என்றும் மணிவண்ணன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டத்தில் இணைய, கிள்ளான், தெங்கு கிளானாவுக்கு வருகை புரியவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஆக, சிலாங்கூர் மாநிலத்தின் ‘தீபாவளி 2017 விசேஷ விடுமுறை’யை, மந்திரி பெசார் கிளானா ஜெயாவில் ஆற்றவுள்ள தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவிக்க வேண்டும்.”

“மத்திய அரசு அதைச் செயல்படுத்த தவறிவிட்டது, ஆனால், சிலாங்கூர் அரசு அதன் நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்களின் மீது அக்கறை காட்டும் வகையில் இதனை அறிவிக்க வேண்டும்,” என மணிவண்ணன் வலியுறுத்தினார்.

அக்டோபர் 13, 2017-ல், இது தொடர்பான கோரிக்கை மனுவை, இந்திய அரசு சார்பற்ற நிறுவனங்கள் சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

“இந்த மனுவிற்கு, மந்திரி பெசார் நல்லதொரு பதிலைத் தருவார் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்றும் மணிவண்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாண்டு தீபாவளி,  அக்டோபர் 18- ம் தேதி, புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. ஆக, சில அரசு சார்பற்ற இயக்கங்கள், அக்டோபர் 19, வியாழக்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.