உலகிலேயே மிக ஆபத்தான நகரங்கள் பட்டியலில் கோலாலம்பூர்?

குற்றவியல் அடிப்படையில், உலகிலேயே மிக மோசமான 30 நகரங்களின் பட்டியலில், தென் கிழக்காசியாவில் இருக்கும் ஒரே நகரம் கோலாலம்பூர் ஆகும். 2017 அரையாண்டு வரையில், பொதுமக்களின் கருத்துகளை மதிப்பிடும் ஒரு நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல், வாழ்க்கைச் செலவீனம், மாசுபாடு, சுகாதாரம், வாழ்க்கைத் தரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சொத்து ஆகியவற்றின் மதிப்பீடு செய்யும் ‘நம்பியோ’ (Numbeo) தளம், மேலதிகக் குற்றச்செயல்கள் குறியீடு கொண்ட 100 இடங்களில், பெட்டாலிங் ஜெயா மற்றும் ஜொகூர் பாரு ஆகிய மாநகரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

68.31 குற்றச்செயல் குறியீட்டு பதிவுடன், கோலாலம்பூர் 29-வது இடத்தில் இருக்கிறது. உலகின் மிக உயர்ந்த குற்றச்செயல் குறியீடுகள் கொண்ட மாநகரங்கள் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் சில நகரங்களில் அமைந்துள்ளன.

இவ்வரிசையில் முதல் 10 இடங்களில், 84.88 குறியீட்டு பதிவுடன் ஹொண்டுராஸில் உள்ள சான் பெட்ரோ சூலா, போர்ட் மோரெஸ்பி (பாப்புவா நியூ கினி), பீட்டர்மாரிட்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா), கராகஸ் (வெனின்சுலா), போர்தலேஜா (பிரேசில்), சால்வடோர் (பிரேசில்), ஜோஹன்ஸ்பெர்க், டர்பன், பிரிட்டோரியா (தென்னாப்பிரிக்கா) மற்றும் ரெசிஃப் (பிரேசில்) உள்ளன.

இப்பட்டியலில் பெட்டாலிங் ஜெயா 40-வது இடத்திலும், ஜொகூர் பாரு 62-வது இடத்திலும், கூச்சிங் 118-வது இடத்திலும் பினாங்கு 149-வது இடத்திலும் உள்ளன.

உலக நகரங்கள் பற்றி, மக்கள் அனுபவம் மற்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, இத்தரவுகளை ‘நம்பியோ’ திரட்டியுள்ளதாக ‘ஃப்.எம்.தி.’ செய்தி வெளியிட்டுள்ளது.

எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆதாரத்தையோ அல்லது அரசாங்க நிறுவனங்கள் மூலமோ இத்தரவுகள் திரட்டப்படவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமானவை இல்லை என்றாலும், உலகிலுள்ள ஒருசில நகரங்களை மதிப்பிட இவை உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.