கோத்தா லாமா சட்டமன்றத்தில், பி.எஸ்.எம். வேட்பாளராக ‘ரோயல்டி’ ஆர்வலர்

அரசு சார்பற்ற அமைப்பான ‘ரோயல்டி’யின் ஆர்வலர், கைரூல் நிஷாம் அப்துல் கானி (வயது 36), கோத்தா லாமா சட்டமன்றத்தின் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு, கிளாந்தான் மாநில மக்களுக்கு பி.எஸ்.எம். ஒரு தேர்வை வழங்கியுள்ளதாக , பி.எஸ்.எம். கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர், எஸ் அருட்செல்வன் கூறினார்.

“கடந்த 1986-ல், இறுதியாக மலேசிய மக்கள் சோசலிசக் கட்சி (பி.எஸ்.ஆர்.எம்.) சார்பாக நாங்கள் போட்டியிட்டோம். ஆக, இம்முறை கிளாந்தான் மக்கள் எந்த அளவு, எங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என, இன்று கோத்தா பாருவில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கருத்துகளை அறிந்தபின், அந்த இடத்தில் வேட்பாளரை  நிறுத்த முடிவெடுத்ததாக அருட்செல்வன் மேலும் கூறினார்.

“பி.என். மற்றும் பாஸ் கட்சிகளின் மாநில ஆட்சியில் இளைஞர்கள் சலித்து போய்விட்டனர், இரண்டுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை,” என்றார் அவர்.

இதற்கிடையே, கோத்தா லாமாவில் பல்லினத்தைச் சார்ந்த வாக்காளர்கள் இருப்பதாகவும், நகர்புறம் என்பதால் இன, மத உணர்வு கொண்ட சிக்கல்கள் அங்கு அதிகம் இல்லை என்றும் கைரூல் நிஷாம் கூறினார்.

“எனவே, கோத்தா லாமா சட்டமன்ற தொகுதியில் மற்ற பெருங் கட்சிகளுக்கு ஈடாக போட்டியிட மக்கள் எங்களுக்கு உதவுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

நெகிரி செம்பிலான், சிரம்பானைச் சேர்ந்த கைரூல் நிஷாம், கிளந்தானில் குடியேறி, கடந்த 8 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்.

அடுக்கா தரூனா என்றும் நன்கு அறியப்பட்ட கைரூல், கிளாந்தான் ‘ரோயல்டி’ அமைப்பின் முதுகெலும்பாக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கிளந்தான் மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து கேட்டபோது, மாநில அரசாங்கத்தால் ஒழுங்காக நிர்வகிக்கப்படாதப் பல பொருளாதார சிக்கல்களைக் களையப் போவதாக கைரூல் நிஷாம் கூறினார்.

“பல நல்ல பொருளாதாரத் திட்டங்கள் இங்கு இருந்தாலும், நிறைய தவறான விஷயங்களும் (பொருளாதாரம்) உள்ளன, அவற்றை நாம் களைய வேண்டும்,” என்றார் அவர்.

“குறிப்பாக, அரசாங்கத்தின் சுமார் 300 மில்லியன் ரிங்கிட் ஆண்டு வருமானம், 60 சதவீதம் அழிவை நோக்கியிருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் உள்நாட்டு தேவைகளை அதிகரிக்க புதிய வளங்களை அடையாளம் காணாமல் இருப்பது, போன்றவை ” என்று அவர் மேலும் விளக்கப்படுத்தினார்.