கிர்குக்கிற்கு படைகளை அனுப்பும் இராக்கிய குர்துகள்

இராக்கின் அரசுப் படைகள் சர்ச்சைக்குரிய கிர்குக் பிராந்தியத்தை மீண்டும் மீட்கும் என்ற அச்சத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான குர்து போராளிகள் அந்நகருக்கு விரைந்துள்ளனர்.

தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தின் துணைத் தலைவர் கொஸ்ராத் ரசுல், ராணுவத்தின் “அச்சுறுத்தல்களுக்கு” இதன் மூலம் பதிலளிப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் ஹைதர் அல்-அபாதி இராக்கிய குடிமக்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில், வியாழக்கிழமை பிற்பகுதியில் கிர்குக்கை நோக்கி படைகள் செல்வதைப் பார்த்துள்ளார்கள்.

பிரதமரும், இராக்கிய ராணுவமும் கிர்குக்கில் ராணுவ நடவடிக்கை எதையும் திட்டமிடவில்லை என்றும், சிரியாவுடனான எல்லை அருகில் உள்ள ராவா, அல் குவெய்ம் பகுதிகளை ஐ.எஸ். படைகளிடம் இருந்து மீட்பதில் கவனம் செலுத்துவதாகவும் வியாழக்கிழமை கூறியுள்ளனர். ஆனால்,

மத்திய போலீஸ், ஷியா ஆயுதக்குழுவினர் அடங்கிய படைகள் கிர்குக் நோக்கி விரைவதைப் பார்த்ததாக பிபிசியின் ஓர்லா குயூரின் தெரிவித்துள்ளார்.

குர்துக்கள் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்திய இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிர்குக் உள்ளிட்ட குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலதிக பேச்சுவார்த்தைக்கு குர்திஷ் அதிகாரிகளிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள இராக்கிய பிரதமர் அபாதி, இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும் அது ரத்து செய்யப்பட வேண்டுமென்றும் கூறினார்.

இராக்கில் உள்ள எண்ணெய் வளமிக்க மாகாணமான கிர்குக்கை குர்துக்களும், அந்நாட்டின் மத்திய அரசாங்கமும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இங்கு குர்துகள் பெரும்பான்மையாக இருப்பதாகக் கருதப்பட்டாலும், அதன் மாகாணத் தலைநகரில் அரேபிய மற்றும் துர்க்மேனிய மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

2014ம் ஆண்டு வடக்கு இராக்கில் ஐ.எஸ். அமைப்பினர் மற்றும் இராணுவம் தங்களின் பலத்தை இழந்தபோது குர்திஷ் பெஷ்மெர்கா படைகள் அம்மாகாணத்தின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

-BBC_Tamil