சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ். இந்துக் கல்லூரியில் நடக்கும் அகில இலங்கை தமிழ்மொழித் தின விழாவில் பங்கேற்கிறார்.

இதில் பங்கேற்பதற்காக, யாழ். வந்த சிறிலங்கா அதிபருக் எதிராக, அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இணைந்து இன்று காலை கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

அரசியல் கைதிகளின் விவகாரத்துக்குத் தீர்வு காணத் தவறிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை வெளியேறக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

maithri-jaffna-black flag (1)maithri-jaffna-black flag (2)maithri-jaffna-black flag (3)

காங்கேசன்துறை வீதியில் போராட்டம் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பகுதியைக் கடந்து, யாழ். இந்துக் கல்லூரி வீதிக்கு வாகன அணியாகத் திரும்பிய சிறிலங்கா அதிபர், தனது வாகனத்தை விட்டு இறங்கி, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைச் சந்தித்தார்.

அப்போது அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அனுராதபுரவுக்கு மாற்றப்பட்ட வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தாம் கவனத்தில் கொள்வதாக சிறிலங்கா அதிபர் கூறிய போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறிலங்கா அதிபருக்கு எதிராக தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டங்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

-puthinappalakai.net

TAGS: