அஸ்மின் அலி : நான் தவளை அல்ல, பிகேஆர்-உடன் தொடர்ந்து இருப்பேன்

சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பி.கே.ஆர். கட்சியிலேயேத் தான் தொடர்ந்து இருக்கப்போவதாக கூறியுள்ளார்.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸ்மின் அலியைக் கட்சி மாறச் சொல்லிய முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் அபு ஹசான் ஓமாரின் ஆலோசனைக்கு, அஸ்மின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“அஸ்மின் நற்குணங்கள் கொண்டிருக்கிறார். அவர் ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், ஆனால், அவர் தவறான இடத்தில் இருக்கிறார். ஆமாம், அவர் ஒரு கட்சியைத் தவறாகத் தெரிவு செய்துவிட்டார்,” என்று அபு ஹாசான் சமீபத்தில் மலேசியாகினியுடனான ஒரு சிறப்புப் பேட்டியில் கூறினார்.

சிலாங்கூரில் அஸ்மினின் நிர்வாகத் திறனை வெகுவாகப் பாராட்டியதோடு, அஸ்மினுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் அபு ஹசான் கூறியுள்ளார்.

“சொல்வது கடினம், ஆனால் அவரைப் போன்று தலைமைத்துவம் வாய்ந்த மந்திரி பெசார் நமக்கு தேவை. பலருக்கு அவரைப் பிடித்திருக்கிறது, அவர் வலுவான ஒரு தலைவர், சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும்,” என்று அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 2014-ல், காலிட் இப்ராஹிமுக்குப் பதிலாக அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின், அவரின் அழைப்பில் தனக்கு ஆர்வம் இல்லை என மலேசியாகினிக்கு ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

“பாராட்டியதற்கு நன்றி, தான் ஶ்ரீ. நான் என் கட்சியிலேயேத் தொடர்ந்து இருக்கிறேன்.”

“நான் ஒரு தவளை அல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.

‘கட்சிவிட்டு கட்சி தாவ மாட்டேன்’ என்பதைக் குறிக்கும் வகையில் அஸ்மின் கூறியுள்ளார்.

செப்டம்பர் 2017, முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார்  முகமட் முகமட் தாயிப், மீண்டும் அம்னோவில் சேர்ந்தார்.

மாட் தாயிப் என்று அனைவராலும் நன்கு அறியப்பட்ட முகமட், ஏப்ரல் 2013-ல் அம்னோவிலிருந்து விலகி பாஸ் கட்சியில் இணைந்தார். ஈராண்டுகளுக்குப் பின்னர், அவர் பிகேஆரில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

முகமட் மீண்டும் அம்னோவிற்கு வந்ததை, புத்ரா உலக வாணிக மையத்தில் இருக்கும் அம்னோ தலைமையகத்தில், சிறப்புப் பத்திரிக்கையாளர் மாநாட்டைக் கூட்டி பிரதமர் நஜிப் அறிவித்தார்.