சாதனைத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் (அக். 12 நினைவு நாள்)

‘ஞாயிறு’ நக்கீரன், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பவள விழாவைக் கொண்டாடக் காத்திருக்கும் மஇகா-வின் நெடிய வரலாற்றில், அந்தக் கட்சிக்கென்று தேசியத் தலைமையகக் கட்டடத்தை நிறுவிய டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம்தான் மலேசிய இந்திய சமூகத்தின் உண்மையான சாதனைத் தலைவர் ஆவார். அடக்கத்தின் மறு உருவான அவர் அமைதியான வழியில் தன் அரசியல் பயணத்தை முடித்துக் கொண்டபின், சாதனைத் தலைவர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர்கள் எல்லாம் ஒரு தலைமுறைக் காலத்திற்கும் மேல் மாணிக்கவாசகம் எழுப்பிய கட்டடத்திலேயே மஞ்சள் குளித்துக் கொண்டிருக்க, சளிப்படைந்த இந்திய சமுதாயத்தின் மனநிலையை உணர்ந்த தேசிய முன்னணி தலைமை, அழுகின்ற பிள்ளைக்கு பொம்மையைக் காட்டி சமாதானம் செய்வதைப் போல இன்னொரு பதவியைக் கொடுத்து ஒரு வழியாக மஇகா தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்றியதெல்லாம் அண்மைய வரலாறு.

தேசிய முன்னணியின் பெரிய அண்ணனான அம்னோ கட்சியே சொந்தக் கட்டடடத்தைக் கொண்டிராத சமயத்தில், தலைநகரின் முக்கியமான இடத்தில் சொந்தக் கட்டடம் எழுப்பி, மஇகா-வின் பெருமைய தேசிய அளவில் பிரதிபலிக்கச் செய்த மாணிக்கவாசகம், அந்தப் பேரியகத்தின் ஆறாவது தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அந்தப் பெருமகனாருக்கு இன்று (அக்டோபர்த் திங்கள் 12-ஆம் நாள்) நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவப் பருவத்திலேயே சமுதாயப் பணியில் நாட்டம் கொண்ட டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், இருபது வயதிலேயே தன்னை மஇகா-வில் இணைத்துக் கொண்டார். மஇகா-வின் முதல் அமைப்புக் கூட்டத்திலேயேக் கலந்து கொண்ட அவர், மஇகா-வில் இரண்டாவதாக அமைக்கப்பட்ட கிள்ளான் கிளையில் செய-லாளராகப் பொறுப்பேற்று தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

இருபது வயதிலேயே கிளைச் செயலாளரான அவர், மஇகா-வில்  தான் ஒரு தனிப்பெரும் தலைவராக வேண்டும் என்னும் ஆவலில் இருந்ததுடன் அதற்கு ஏற்ப அவரும் தன்னை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். அதனால்தான் 29 வயதிலேயே அவரால் மஇகா சிலாங்கூர் மாநிலத்  தலைவராக முடிந்தது.

மஇகா-வை 1973 முதல் 1979ஆம் ஆண்டு வரை வழிநடத்திய  டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், அந்தக் காலக் கட்டத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தையும் சிறப்பாக வழிநடத்தினார். அதனால்தான், மலேசிய இந்திய சமுதாயத் தலைவர்களில் இவர் இன்றளவும் புகழுடன் விளங்குகிறார்.

தேசத் தந்தை துங்குவின் மூன்றாவது, நான்காவது அமைச்சரவை; அதைப் போல துன் ரசாக்கின் முதலாவது, இரண்டாவது அமைச்சரவை; துன் உசேன் ஓனின் முதலாவது, இரண்டாவது அமைச்சரவை என ஆறு அமைச்சரவைகளில் பொறுப்பு வகித்த மாணிக்கவாசகம், தொழிலாளர் துறை, தொடர்பு துறைகளின் மூலம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சிறப்பாகப் பணியாற்றினார்.

சுதந்திர மலேசியாவில் இந்திய சமூகம் முன்னேற வேண்டும் என்று தணியாத ஆர்வம் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட அவர், அதன்பொருட்டு, மஇகா சார்பில்  நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தையும் யூனிட் டிரஸ்ட் அமைப்பையும் நிறுவினார்.

மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வீட்டுடைமைத் திட்டத்தையும் உருவாக்கிய அத்தலைவர், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டதிலும் பெரும்பங்காற்றினர்.  அதைப்போல, இந்திய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடைபடக்கூடா-தென்னும் உயர்நோக்கில் மஇகா சார்பில் கல்வி உதவி நிதியத்தையும்  கல்வி கடன் வசதியையும் தோற்றுவித்தார். சிலாங்கூர் கோலசிலாங்கூர் தோட்டத்தில் 1926 ஆம் ஆண்டில் இதேத் திங்கள் 4-ஆம் நாளில் வெங்கடாசலம்-சுப்பம்மாள் இணையருக்குப் பிறந்த இவர், சிறு வயது முதலே நல்வழியில் வளர்ந்து, நன்கு கற்று இளம் வயதிலேயே தலைமைத்துவ பண்புடன் திகழ்ந்தார்.

துன் சம்பந்தனாருக்குப் பின் கட்சிக்கும் சமுதாயத்திற்கு தலைமை ஏற்ற மாணிக்கவாசகம், ஆறு ஆண்டுகள்தான் பொறுப்பில் இருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால், 53 வயதிலேயே 1979-ஆம் ஆண்டு இதே நாளில் இயற்கை எய்தினார்.

தனக்குப் பின், மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் வர வேண்டும் என்று விரும்பிய மாணிக்கவாசகத்தின் எண்ணம் கடைசிவரை நிறைவேறாமலேயேப் போய்விட்டது. எது எவ்வாறாயினும் மலேசிய அரசியல் வரலாற்றிலும் இந்திய சமூக வரலாற்றிலும் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் பெயரும் புகழும் நிலைத்திருக்கும்.