மஇகாவின் வண்ணமயமான தீபாவளிக் கொண்டாட்டத்தில் ‘தந்தை’ நஜிப் கலந்துகொண்டார்

பத்துமலை வளாகத்தில் இன்று நடைபெற்ற மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி நிகழ்ச்சியில் ‘தந்தை’ நஜிப் ரசாக் கலந்து கொண்டது அந்நிகழ்ச்சியை மேலும் மகிழ்ச்சிகரமானதாக்கியது.

காலை மணி 10.30 பத்துமலை வளாகம் வந்தடைந்த பிரதமர் நஜிப்பை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் இதர கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.

மேடைக்குச் சென்று அமருமுன்னர், பிரதமர் நஜிப், “நெகாராகு” என்ற கருப்பொருளைக் கொண்ட ஒரு சிறப்பு கோலத்தைச் சென்று கண்டார். பின்னர், பல்லின மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவர் தலைவர்களுக்கான மேடைக்குச் சென்று அமர்ந்தார்.

மத்தளங்கள் முழங்கின. இன்னிசையும் பாரம்பரிய நடனங்களும் இந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. இந்நிகழ்ச்சியில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், போகுவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், அமைச்சரும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங், இந்தியா மற்றும் தென் ஆசியாவுக்கான கட்டமைப்பு சிறப்புத் தூதர் ச. சாமிவேலு, துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன், அரசு தலைமைச் செயலாளர் டாக்டர் அலி ஹம்சா ஆகியோர் அங்கிருந்தனர்.

விருந்தாளிகளுக்கு இந்தியப் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது, அதில் தோசை, கோழி மசாலா மற்றும் பிரியாணியும் அடங்கும்.

தமது வருகையின் இறுதிப் பணியாக நஜிப் தீபாவளி கேக்கை வெட்டினார். அதன் பின்னர், எம்எஐசிசிஐ மற்றும் எச்ஜிஎச்சிசி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றார்.