தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணைக் கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை கொடூரமானது அருவருப்பானது என்று சிறிலங்கா அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ், தமிழ் அரசியல் கைதிகளை சிறை வைத்திருப்பதில் என்ன நியாயம் உள்ளது?

சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு அனைத்துலக தர நியமங்களுக்கேற்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

அந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்கள் சாதாரண நீதிமன்றத்தினால் கூட ஏற்றுக் கொள்ளமுடியாத ஒப்புதல் வாக்குதல் மூலத்தின் அடிப்படையில் தான் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. அதுபோல தமிழ் அரசியல் கைதிகளும் ஏன் விடுவிக்கப்படக் கூடாது?

இந்த விவகாரத்துக்கு ஒரு அரசியல் பரிமாணம் உள்ளது. இவர்களின் விடுதலை, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு முக்கியமானது.

வவுனியாவில் இருந்து அனுராதபுரவுக்கு வழக்குகள் மாற்றப்பட்டமை முரண்பட்ட விடயமாகும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

-puthinappalakai.net

TAGS: