வெளியூரில் ரோஹிஞா அகதிகளுக்கு மருத்துவமனை கட்டுவதற்கு முன் உள்ளூர் மருத்துவமனைகளின் அவலத்தைப் போக்குவீர், டாக்டர் இட்ரீஸ்

மலேசியாவிலிருக்கும் பல மருத்துவமனைகளுக்கு அரசாங்கத்தின் கவனம் மிக அவசரமாகத் தேவைப்படும் போது, பங்களாதேசத்தில் கள மருத்துவமனை கட்ட ஏன் அரசாங்கம் திட்டமிட வேண்டும் என்று ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரீஸ் அஹமட் கேட்கிறார்.

மலேசியாவில் பல மருத்துவமனைகள், குறிப்பாக கிராமப்புறங்களில், பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, பென்டாங், கெடா. பிரதமர் அவரது 2016 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் கட்டபடவிருக்கும் மருத்துவமனைகளில் பென்டாங் மாவட்ட மருத்துவமனையைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அம்னோ-பாரிசான் அரசாங்கம் அளித்திருந்த அந்த வாக்குறுதி இன்றுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் பென்டாங் மருத்துவமனை 16.8 ஹெக்டேக்கர்ஸ் நிலத்தில் கட்டுவதற்கு அங்கீகரிக்கப்பட்டது. சில காரணங்களுக்காக அது பத்தாவது மலேசியத் திட்டத்திற்கு தள்ளிப்போடப்பட்டது. இப்போது அதை பதினோறாவது மலேசியத் திட்டத்தில் கட்ட அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும், இன்றுவரையில் எதுவும் நகரவில்லை.

“மற்றொரு பக்கத்தில், பங்களாதேச அரசாங்கத்தின் அனுமதி கிடைத்த பின்னர் ஒரு மாதத்திற்குள் ஒரு கள மருத்துவமனை கட்டப்படும் என்று துணைப் பிரதமர் கூறியிருக்கிறார். இந்நாட்டில் நலிவுற்றிருக்கும் மருத்துவமனைகளின் கதி என்ன?”, என்று டாக்டர் இட்ரீஸ் அஹமட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பங்களாதேசத்திற்குள் வரும் ரோஹிஞா அகதிகளுக்கு உதவுவதற்காக ரிம3.5 மில்லியன் செலவில் பங்களதேஷ், கோக்ஸ் பஜாரில் ஒரு மருத்துவமனையை மலேசிய அரசாங்கம் கட்டித்தரும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை துணைப் பிரதமர் ஸாகிட் அறிவித்திருந்தார்.