புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை உடன் நிறுத்தக் கோருகிறது சங்க சபா

புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று, மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா கோரியுள்ளது.

தலதா மாளிகையில் நேற்று நடந்த மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த காரக மகா சங்க சபா உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு மல்வத்த மகா விகாரையின் அனுநாயக்க தேரர்  திம்புல்கும்புர விமலதர்ம தேரர், அஸ்கிரிய மகா விகாரையின்  அனுநாயக்க தேரர்களான வேரடுவே  உபாலி தேரர், மற்றும் ஆனமடுவே சிறி தம்மதாசி நாயக்க தேரர் ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

இரண்டு மணிநேரம் நடந்த கூட்டத்துக்குப் பின்னர், இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, மல்வத்த மகா விகாரையின் அனுநாயக்க தேரர்  திம்புல்கும்புர விமலதர்ம தேரர், விளக்கமளித்தார்.

“முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு பொருத்தமற்றது. நாடாளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி அதன் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கும், உள்ளூராட்சி சபைகளுக்கும் பகிரும் வகையில், இது அமைந்திருக்கிறது.

இந்த அரசியலமைப்பு பொருத்தமற்றது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

புதிய அரசியலமைப்பு தேவையற்றது. தற்போதைய அரசியலமைப்பே எமக்கு நல்லது.

அஸ்கிரிய, மல்வத்த மகாநாயக்கர்கள் மற்றும் ராமன்னய, அமரபுர நிக்காயாக்களுக்கு விளங்கப்படுத்தி விட்டு மகாசங்கத்தின் எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்துவோம்.

அரசியலமைப்பை வரைவும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறோம்.

தற்போதைய அரசியலமைப்பே எமக்குச் சிறந்தது. அதிபரின் அதிகாரங்கள் அப்படியே இருக்க வேண்டும். ஆனால், தொகுதிவாரி முறைப்படியான தேர்தல் முறை அமைய வேண்டும்.

முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவுக்கு மகாசங்கம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் கலாநிதி மெதகம சிறி தம்மானந்த தேரர், இப்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது, இன மற்றும் சமூகப் பிளவுகளுக்கே இட்டுச் செல்லும் என்றுளு தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி கொள்கையை கைவிடும், அரசிய் அதிகாரத்தை பரவலாக்கும் யோசனைகள், மோசமான நிலையை ஏற்படுத்தும். நாட்டைப் பிளவுபடுத்தும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: