ஆப்கன் ராணுவ தளம் மீது தாலிபன் தற்கொலைப்படை தாக்குதல்: படையினர் 43 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான கந்தஹாரில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து, தாலிபனின் இரண்டு தற்கொலைப்படையினர் தாக்கியதில், குறைந்தது 43 ஆப்கன் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆறு பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இதில் பத்து கிளர்ச்சியாளர்களும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மைவாண்ட் மாவட்டத்தில் உள்ள காஷ்மோ பகுதியில் நடந்த இந்த தாக்குதல், இந்த வாரம் ஆப்கன் பாதுகாப்புப்படை மீது நடந்த மூன்றாவது பெரிய தாக்குதலாகும்.

இந்த தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்றுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்தீஸ் நகரில் உள்ள காவல்துறை பயிற்சி மையத்தில் அதிரடியாக புகுந்த தாலிபன் தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவரும், துப்பாக்கி ஏந்தியவரும் 41 பேரை கொன்றனர்.

இதில் 150 பேர் காயமடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் உள்ளதாக கூறிய, பக்தியா பகுதி மருத்துவமனை ஒன்று, உடனடியாக ரத்தம் அளிக்கக்கூடியவர்கள் தேவை என்ற முறையீட்டை வெளியிட்டது.

அதேநாள், காஸ்னி மாகாணத்தில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய நபர், அந்த மாகாண ஆளுநர் அலுவலகத்தினுள் நுழைவதற்கு முன்பு, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு கனரக வாகனத்தை அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வெடிக்கச் செய்தனர்.

ஆப்கன் நாட்டில் மீண்டும் தங்களின் இஸ்லாமிய விதிகளை கடுமையாக கொண்டுவர தாலிபன் முயல்கிறது. இந்த ஆண்டு, தாலிபன் அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஆப்கன் ராணுவமும், காவல்துறையும் அதிக உயிரிழப்பை கண்டுள்ளது.

-BBC_Tamil