‘மெர்சல்’ படத்தை மருத்துவ சங்கத்தினர் புறக்கணிக்க வேண்டும் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு பிரிவு வேண்டுகோள்

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஜி.எஸ்.டி., இலவச மருத்துவம் தொடர்பாக விஜய் பேசும் வசனங்களால் அரசியலிலும், மருத்துவ வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. பற்றிய ‘மெர்சல்’ பட கருத்துக்கு தமிழக பா.ஜ.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்திய மருத்துவ சங்கம் புதுவித பதிலடியை ‘மெர்சல்’ படத்துக்கு கொடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் நல்ல சேவை இல்லை என்பதால் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மக்கள் செல்கின்றனர் என்றும், பணம் சம்பாதிப்பதற்காகவே மருத்துவ தொழிலை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர் என்றும் ‘மெர்சல்’ படத்தில் நடிகர் விஜய் பேசுகிறார். மருத்துவ சமுதாயத்தினருக்கும், டாக்டர்களுக்கும் எதிராக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். எனவே மருத்துவ சங்கத்தினர் அனைவரும் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு நாங்கள் பத்திரிகைகள் மூலமாகவோ, கோர்ட்டு மூலமாகவோ நிவாரணம் தேடப்போவதில்லை. மாறாக புதுவித போராட்டம் நடத்த உள்ளோம். அதன்படி இணையதள பக்கங்களில் ‘மெர்சல்’ படத்துக்கான இணைப்பு முகவரியை வெளியிடுவோம். அதன் மூலம் பலர் அந்த படங்களை கட்டணம் இன்றி பார்த்துவிடுவதால் டிக்கெட் விற்பனை பாதிக்கும். இந்த தகவலை அனைத்து டாக்டர்களுக்கும் பரவச்செய்து அமைதி போராட்டத்தில் ஈடுபடுங்கள்.

உங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த படத்தை புறக்கணிப்பதை உறுதி செய்யுங்கள். இது நம் போராட்டத்தையும் எதிர்ப்பையும் சம்பந்தப்பட்டவர்கள் நன்றாக உணரும்படி செய்யும். நமது ஒற்றுமையை காட்டுவதோடு, கவுரவத்தையும் நிலைநிறுத்துவோம். பட வசூலில் அடி கொடுத்தால்தான் அவர்கள் உணருவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ திருட்டு குற்றத்தின் கீழ் வரும் என்பதால், அந்தப் படத்துக்கான இணையதள இணைப்பு முகவரியை அவர் வெளியிடவில்லை.

இதுகுறித்து இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் செயல் உறுப்பினர் டாக்டர் சந்திரசேகரிடம் கேட்டபோது, “பொது விடுமுறை நாட்களில் கூட அரசு டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சேவை கூட விடுமுறை நாட்களில் அளிக்கப்படுகிறது. தீபாவளி மற்றும் மறுநாளில்கூட தீக்காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளித்தோம். நாங்கள் சேவையில் கவனக்குறைவாகவோ, சோம்பேறியாகவோ இருப்பதாக கூறுவதில் நியாயம் இல்லை” என்றார்.

-dailythanthi.com