நினைத்ததை நடத்திக்காட்டிய பாஜக.. கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிப்பு!

சென்னை: சென்சார் அனுமதி பெற்று வெளியான ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிகளை நீக்கச் செய்யும் அளவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி குறித்தும், பண மதிப்பிழப்பு குறித்தும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் காட்சிகள் உள்ளன. இதை கண்டித்து பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

காட்சியை நீக்கியே ஆக வேண்டும் என்று தமிழிசை தொடர்ந்து வலியுறுத்தினார். 2 நாட்கள்தான் கெடு என்று அறிவிக்கும் நிலைக்கு சென்றது பாஜக.

எச்சரிக்கை

இந்த நிலையில்தான் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமி, குறிப்பிட்ட காட்சிகளை நீக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “யார் கொடுத்த தைரியம்” என்று தயாரிப்பாளர் தரப்புக்கு ஒரு எச்சரிக்கை தொனி சென்று சேர்ந்ததாகவும், இதன்பிறகே படக்குழு இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும், கோடம்பாக்கம் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

பகைத்தால் அவ்வளவுதான்

மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து கூட சினிமா பிரபலங்கள் கருத்து கூற முடியாத நிலைதான் உள்ளது. கமல் கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். வடிவேலு இப்படித்தான் சினிமா உலகில் இருந்தே வெளியேற்றப்பட்டார். கத்தி சண்டை படத்திற்கு பிறகு மெர்சலில்தான் முழு அளவில் அவர் ரீஎன்ட்ரி கொடுக்க முடிந்துள்ளது. இந்த நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களை பகைத்தால் என்னவாகும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பலர் பிழைப்பு

சினிமாத்துறை என்பது கோடிக் கணக்கில் பணம் புழங்கும் துறை. அரசை பகைத்துக்கொண்டு, அதனால் பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டால் பலரும் எழ முடியாத அளவுக்குபாதிக்கப்படுவார்கள். இதனால்தான் சினிமாத்துறையினர் அரசுக்கு வளைந்துகொடுத்தும், பாராட்டியும், சீராட்டியும், பிழைப்பை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. ஜனநாயக நாடுதான் என்றாலும், இதுதான் நமது நிலை.

விஜய் தைரியம்

இந்த சூழ்நிலையில்தான், சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் சில திட்டங்களுக்கு எதிராக ரொம்பவே ஷார்ப்பான வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளில் நடிக்கும் முன்பே சிக்கல் ஏற்படும் என்பதை விஜய் உணர்ந்திருப்பார். இருப்பினும், மக்களுக்கு ஏதாவது நல்லது சென்று சேரும் என்ற ஒரு நம்பிக்கையில் நடித்திருப்பார். ஆனால், பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது. ரெய்டு என்றோ அல்லது வேறு என்ன சொல்லி வேண்டுமானாலும் நெருக்கடிகள் வந்திருக்கலாம் என்கிறார்கள். அல்லது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டெபாசிட் கூட வாங்க முடியாத ஒரு கட்சியால் வேறு எப்படி நெருக்கடி தரமுடியும்?

எழுதி கொடுத்துவிடுங்களேன்

சென்சார் வாரியம் அனுமதித்த ஒரு படத்திலுள்ள காட்சிகளை நீக்க பாஜக வற்புறுத்த முடிகிறது, அதுவும் நடக்கிறது என்றால் இது மோசமான முன் உதாரணங்களை ஏற்படுத்திவிடும். ஆளும் கட்சி நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்றால் அது ஜனநாயகமா, சென்சார் வாரியம்தான் அவசியமா? பேசாமல் வாரியத்தை கலைத்து பணத்தை மிச்சப்படுத்திவிட்டு போகலாம். தமிழிசை, எச்.ராஜா போன்றோர் கதை, வசனம் எழுதி கொடுக்கும் படங்கள் மட்டுமே தமிழகத்தில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று கூட சொல்லிவிடலாம்.

tamil.oneindia.com