‘ஏகிய இராஜ்ய’வை எதிர்ப்பது ஏன்? – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான  சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார்.

அண்மையில் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த திரு.விக்னேஸ்வரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு மீதான விவாதம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் சிலோன் ருடே ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது:

கேள்வி: புதிய அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏகிய இராஜ்ய  ”Ekiya Rata’ ‘  என்கின்ற சொற்றொடரை மாற்றுமாறு தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கான காரணம் என்ன?

பதில்: இந்த நாட்டின் ஒருமைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பதற்கான பிறிதொரு வழியாக இச்சொற்றொடர் மாற்றம் அமையும் என நான் குறிப்பிட்டுள்ளேன். இந்த வார்த்தையானது ‘Eksath   (ஐக்கிய) எனப் பிரயோகிக்கப்பட்டிருந்தால் சிங்களத் தலைவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடிந்திருக்கும். ஆனால் சிங்களத் தலைவர்கள் ”Eksath Rata’ ‘ என்பதை விட ”Ekiya Rata’ ‘ என்கின்ற சொற்றொடரைப் பிரயோகிப்பதையே விரும்பினர்.

உயர் நீதிமன்றம் ”Ekiya Rata’ ‘என்பதை ஒற்றையாட்சி நாடு என்றே மொழிபெயர்க்கும். இந்த நாடானது ஒருபோதும் ஒற்றையாட்சி நாடாக இருந்ததில்லை. பல்வேறு இனக்குழுமங்களாகத் தனித்தனியாக வாழ்ந்த மக்கள் பிரித்தானியர்களால் ஒன்றிணைக்கப்பட்டனர்.  இதன் பின்னர் ஒற்றையாட்சி நிலையானது பெரும்பான்மை சமூகத்தால் அமுல்படுத்தப்பட்டது.cm-colombo-press-1

1919 மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் செயற்பட்ட சிங்களத் தலைவர்களான சேர் ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஏ.சமரவிக்ரம போன்றோர் நெடுங்காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர் என்கின்ற உண்மையை ஏற்றுக்கொண்டனர்.

நாட்டில் வாழும் அனைத்து சமூகத்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பை உருவாக்கும் போது பிரித்தானியர்கள் சிதறிக்கிடந்த பல்வேறு சமூகத்தவர்களை ‘ஒன்றிணைத்தனர்’ என்கின்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதன் காரணமாகவே நாங்கள் என்கின்ற ”Eksath ‘ (ஐக்கிய) வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

கேள்வி: தாங்கள் புலிகளின் குரலாகச் செயற்படுவதாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க விமர்சித்திருந்தார். ஆனால் தற்போது தாங்கள் புலம்பெயர் சமூகத்திற்கு ஆதரவாகச் செயற்படுகிறீர்கள். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: நான் பிறருக்காகச் செயற்படுகிறேன் என்பது சரியான கருத்தாகும். அதாவது நான் எனது வடமாகாண மக்கள் சார்பாகச் செயற்படுகிறேன். எமது மக்களின் பிரச்சினைகளை சிங்கள சகோதரர்களிடமும் அனைத்துலக சமூகத்தின் முன்னும் சமர்ப்பிக்கின்ற ஒரு சட்டவாளராகவே நான் செயற்படுகிறேன்.

சட்டவாளர் ஒருவர் தனது கட்சிக்காரின் வழக்கில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். எமது தமிழ் மக்களின் கோரிக்கை மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். மதம் மீது அதிக நம்பிக்கை கொண்டவன் என்ற வகையில் நான் மனிதாபிமானத்தை முழுமையாக நேசித்தேன். தற்போதும் நேசிக்கிறேன். இதன் காரணமாகவே எனக்கு எதிராகச் சதி செய்பவர்கள் மற்றும் எனக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் எனக் கருதுபவர்கள் எனக்கு முன்னால் அமைதியாக இருந்து விடுகிறார்கள்.

நான் எவர் மீதும் வசைபாடவில்லை. ஆனால் விமர்சிக்க வேண்டியவர்களை விமர்சிப்பதுடன் ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு ஆதரவையும் நான் வழங்குவேன். அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் பிழை செய்பவர்களை விமர்சிப்பதை விட பிழையான செயற்பாடுகளையே விமர்சிக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ‘பிரிவினைவாதத்திற்கு’ நான் ஆதரவளிப்பதாக அமைச்சர் கூறமுற்படுகிறார்.

cmநான் 133,000 இற்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவுடன் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டே முதலமைச்சராகினேன் என்பதை அமைச்சர் மறந்து விட்டார். மாறாக நான் பிரிவினைவாதத்தை தூண்டியதன் மூலம் பதவிக்கு வரவில்லை. அத்துடன் சுயநிர்ணயம், வடக்கு – கிழக்கு இணைப்பு, கூட்டாட்சி போன்றவை எமது 2013 தேர்தல் விளக்கவுரையில் காணப்படுகிறது.

அமைச்சர் திசநாயக்க ஒரு பட்டதாரி ஆவார். இவர் உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார். இந்நிலையில் இவருக்கு பிரிவினைவாதம் மற்றும் கூட்டாட்சி போன்றவற்றுக்கு இடையிலான வேறுபாடு தெரியாதா? இந்த அடிப்படையில் கூட்டாட்சி என்பது பிரிவினைவாதத்திற்கு எதிரானதாகும். கூட்டாட்சி என்பது தனித்தனியாக உள்ள சமூகங்களை ஒன்றிணைக்கின்றது.

என்னை புலிகளின் குரல் எனக் கூறும் அமைச்சர், அவர் கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்கின்ற பிரிவையும் அடையாளங் கண்டுகொள்ள வேண்டும். புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் பெருமை பேசியது. இந்நிலையில் அமைச்சர் தற்போது எந்த அமைப்பைப் பற்றிப் பேசுகிறார்?

2013 தேர்தலில் போட்டியிடும் போது நாங்கள் முன்வைத்த தேர்தல் விளக்கவுரையின் அடிப்படையில் நான் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டேன். இந்த அடிப்படையிலேயே நான் செயற்பட்டு வருகிறேன். இது எனது கடமையாகும்.

கேள்வி: அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களுக்கு அதிருப்தியளிப்பதாகவும் நாட்டில் நிலவும் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது தொடர்பான புரிந்துணர்வு இல்லாமலேயே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் தெரிவித்திருந்தீர்கள். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: 1919-1921 வரையான காலப்பகுதியில் செயற்பட்ட சிங்களத் தலைவர்கள் அரசியற் தலைமையைத் தம்மகத்தே வைத்திருந்தமையே இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணமாகும். சிறுபான்மை மக்களை சிறந்த முறையில் நடத்துவதாக சிங்களத் தலைவர்கள் பிரித்தானியாவிடம் வாக்குறுதி வழங்கிய போதிலும் படிப்படியாக இவர்களின் கைகளில் நாட்டின் அரசியல் அதிகாரம் வரத் தொடங்கிய பின்னர் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கத் தொடங்கினர்.

இதன் முதற்கட்டமாக 1949ல் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதன் பின்னர் 29வது சரத்திற்கு எதிர்மாறாக, 1956ல் சிங்கள மட்டும் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இது வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் மொழி உரிமையைப் பறித்தது. 1971ல் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் முகமாக தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இயற்கைச் சட்டத்திற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் சிங்கள மொழி பேசும் மக்கள் குடியமர்த்தப்பட்டனர். வடக்கு கிழக்கு மக்களின் கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

cm1919-1921 வரையான காலப்பகுதியில் சிங்களத் தலைவர்கள் பெற்றுக் கொண்ட பிராந்திய விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் நாடாளுமன்றில் சிங்களவர்கள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் இவர்கள் தமக்குச் சார்பான சட்டங்களை இயற்றிக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர்.

பிராந்திய விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்காக இனவிகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைக் கைவிடுமாறு சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்களான சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் போன்றவர்களிடம் பேச்சு நடத்தினர். திட்டமிட்ட சட்டங்களை அமுல்படுத்துவதற்காக சிங்களத் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேரம் பேசத் தொடங்கினர்.

இவ்வாறான பேரம் பேசல்களின் விளைவாக பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கை, டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை போன்ற பல்வேறு உடன்படிக்கைகள் நடைமுறைக்கு வந்தன.

தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் என அழைக்கப்பட்டவர்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரபட்சங்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை.

சிறுபான்மை மக்கள் தொடர்பில் 1919-1921ல் சிங்களத் தலைவர்களும் 1948ல் பிரித்தானியர்களும் நீதி, நேர்மை மற்றும் மதிப்புடன் நடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் வெற்றியளிக்கவில்லை. இவர்கள் பௌத்த சிங்களவர்களுக்கே முன்னுரிமை அளித்தனர். வடக்கு கிழக்கைப் பொறுத்தளவில் கூட்டாட்சி நிர்வாக அலகுடன் இணைந்த அரசியல் யாப்பானது அங்கு வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாக்கும்.

அத்துடன் சிங்களத் தலைவர்களால் தமிழ் பேசும் மக்களுக்கு இதுவரை இழைக்கப்பட்ட பல்வேறு அநீதிகளும் கூட்டாட்சி அரசியல் யாப்பின் மூலம் திருத்தியமைக்கப்படும் என நாங்கள் கருதுகிறோம். ஏன் கூட்டாட்சியை வழங்க முடியாது என்பது தொடர்பாகக் கூட இடைக்கால அறிக்கையில் கலந்துரையாடப்படவில்லை. இந்நிலையில் இந்த அறிக்கையைத் தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

வழிமூலம்      – Ceylon today
ஆங்கிலத்தில் – Sulochana Ramiah Mohan
மொழியாக்கம் – நித்தியபாரதி

TAGS: