பொறுப்புக்கூறல் விவகாரங்களைத் துரிதப்படுத்துவதாக ஐ.நா சிறப்பு நிபுணரிடம் மைத்திரி வாக்குறுதி

பொறுப்புக்கூறல் விவகாரங்களை துரிதமாக முன்னெடுப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குச் சென்று, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஆகியோரைத் தனித்தனியாக  சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளருடனான சந்திப்புத் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தகவல் வெளியிடுகையில்,

“சிறிலங்கா வந்துள்ள ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருடனான, தனிப்பட்ட சந்திப்பாக இது நடைபெற்றது. இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் தற்போது அந்த முயற்சியில் காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பாகவும் அவருக்கு விபரித்தேன்.

நிலைமாறு கால நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், மீள நிகழாமையை உறுதி செய்தல், காணாமல்போனவர்களுக்கான பணியகத்தை  அமைக்க வேண்டியதன் அவசியம், காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மையை கண்டறிதல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரமான நிலைமை, அது முழுமையாக நீக்கப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தேன்.

காணிகள் விடுவிப்பு தொடர்பாக காணப்படும் தாமதங்கள், மக்களின் மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடுத்தப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் நான் எடுத்துக் கூறியிருந்தேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை  முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதில் காணப்படுகின்ற தாமதங்களையும் சுட்டிக்காட்டினேன்.

இந்த விடயங்களைக் கேட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நான் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் பற்றி தாம், சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக அது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பல்வேறு விடயங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் விடயங்களில் தமது அக்கறை தொடர்ந்தும் நீடிக்கும் என உறுதிபடத் தெரிவித்த அவர் , நான் குறிப்பிட்ட விடயங்களில் காணப்படும் காலதாமதங்கள் தொடர்பாக தான், சிறிலங்கா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடிய போது சுட்டிக்காட்டியதாகவும், அந்த விடயங்களை துரிதமாக முன்னெடுப்பதற்கு அவர் இணங்கியுள்ளார் என்றும், அவர்  என்னிடம் குறிப்பிட்டார்”  என்றார்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் முக்கிய பங்களிப்புச் செய்கின்ற வழிநடத்தல் குழு உறுப்பினர்களான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரையும்  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், குழு அறையில் கலந்துரையாடியிருந்தார்.

-puthinappalakai.net

TAGS: