குவான் எங் : நிலச்சரிவு சோகமான நிகழ்வு, மாநில விசாரணை ஆணையம் அமைக்கப்படும்

ஜோர்ஜ் டவுன், தஞ்சோங் பூங்கா, லெங்கோ லெம்பா பெர்மாயில், மலிவு விலை வீட்டுத் திட்டக் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றி விசாரிக்க, சிறப்பு விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைக்கவுள்ளது.

இன்று அதிகாலையில் ஏற்பட்ட அந்நிலச்சரிவில், புதையுண்ட 14 பேரில், மூவர் இறந்துவிட்டனர், படுகாயம் அடைந்த ஒருவர் பினாங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிர்பலி கொண்ட இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணத்தை உறுதியாகக் கண்டுபிடிப்போம் என்றும் மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.

அதற்கான அனுமதியை, மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்பாசிடன் பெறவுள்ளதாகவும் குவான் எங் தெரிவித்தார்.

“இது கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட சம்பவம். இதற்கு வழக்கமான விசாரணை போதாது. எனவே, அம்னோ கோபுரம் மற்றும் இரண்டாவது பாலம் ஆகிய சம்பவங்களை  விசாரித்தது போல், இச்சம்பவத்திற்கும் நாங்கள் ஒரு மாநில விசாரணை ஆணையத்தை அமைக்க இருக்கிறோம்.

“சம்பவத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை   நிபுணர்களிடம் ஒப்படைக்கிறோம்.”

“இந்தச் சம்பவத்தினால் நான் மிகவும் வருத்தமாக உள்ளேன், பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவ மாநில அரசு எல்லாவற்றையும் செய்யும்”, என அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“நாங்கள் ஊழியர்களின் பாதுகாப்புத் தரத்தையும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்”, என்றார் அவர்.

மூவர் இறந்தனர், 10 பேரின் நிலை தெரியவில்லை

நிலச்சரிவில் 14 பேர் புதையுண்டது உறுதி படுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் இரண்டு இந்தோனேசியர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு தீ மற்றும் மீட்புப்பணி இயக்குனர் சாடன் மோக்தார் தெரிவித்தார்.

பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இன்னொருவரின் உடலை மீட்பு பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

புதையுண்டவர்களில் ஒருவர் மலேசியர், மற்ற 13 பேரும் இந்தோனேசியா, வங்காள தேசம் மற்றும் ரொஹிங்கியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சாடன் தெரிவித்தார்.

தேடுதல் பணியில் தாமதம் ஏற்படலாம்

“15 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மூன்று மண்டலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆழமாக புதையுண்டுள்ளனர். அது களிமண், மேலும் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என்பதால், தேடுதல் பணியில் தாமதம் ஏற்படலாம்”, என்றும் அவர் மேலும் கூறினார்.

“நிலச்சரிவு ஏற்பட்ட இடம் 35 மீட்டர் சாய்வானது. இதில், மண்ணைத் தோண்டி, தேடும் பணிகள் கடினமாக உள்ளது ….. சில இடங்கள் பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகின்றன”, என்று அவர் கூறினார்.

சம்பவத்தின் போது, அனைவரும் கட்டிடத்தின் நிலத்தடியில் வேலையில் இருந்ததாகத் தெரிகிறது என்றும் சாடன் கூறினார்.

“இடிந்தது நிலத்தடி பகுதி…. அவர்கள் அப்பகுதியில் இப்போதுதான் வேலையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது,” என்றார் அவர்.

கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன

இதற்கிடையே, பினாங்கு நகர மேயர் மைமுனா முகமது ஷெரீப், இந்தக் கட்டுமான திட்டத்தை நிறுத்தும் உத்தரவை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“சம்பவத்திற்கான சரியான காரணத்தை அறிய பொறியியளர்களின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பினாங்கு காவல்துறை தலைவர் சுவா கீ லாய், “பாதிக்கப்பட்டவர்கள் 10 மீட்டர் ஆழத்தில் புதையுண்டு கிடக்கின்றனர். எனினும், மீட்புப் பணிகள் தொடர்கின்றன,” என்றார்.

“பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட பின், தூதரகங்களின் மூலம் அவர்களின் குடும்பத்தாருக்கு  நாங்கள் அறிவிப்போம்”, என அவர் தெரிவித்தார்.