மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெர்சலான பாஜக..!

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் வெளிவருவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்து வெளிவருமா? வெளிவராதா? என்ற நிலையை தாண்டி ஒருவழியாக தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது.

இந்த நிலையில் மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜி.எஸ்.டி குறித்து தவறான தகவல்கள் அடங்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக பாஜகவினர் மீண்டும் புதிய சர்ச்சையை உருவாக்கினர்.

7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் 28 சதவீத ஜி.எஸ்.டி வசூலிக்கும் இந்திய அரசாங்கத்தால் ஏன் மருத்துவத்தை இலவசமாக தரமுடியவில்லை எனவும் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் ஆளும் பாஜகவினர் மத்தியில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா என பா.ஜ.கவினர் அனைவரும் நடிகர் விஜய்க்கும், மெர்சல் திரைப்படத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் சர்ச்சைக்குறிய அந்த காட்சிகளை நீக்கவேண்டும் என்றும் அந்த காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் முரளிராமசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு மெர்சல் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுவதாக உறுதி அளித்ததாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மெர்சல் திரைப்படத்தில், டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள், முழுமையாக நீக்கவும் அறிவுறுத்தப்பட்டதாகவும், நேற்று மாலை முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தணிக்கை குழு அதிகாரிகள் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை தங்கள் ஒப்புதல் இல்லாமல் நீக்க முடியாது என தயாரிப்பாளர் முரளிராமசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து சர்ச்சைக்குறிய அந்த காட்சிகளை நீக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் காட்சிகள் நீக்கப்படாமலே மெர்சல் திரைப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து தணிக்கை குழுவால் அங்கிகாரம் பெற்ற ஒரு படத்தை நீக்க சொல்வது தவறு என்று மெர்சல் படத்திற்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவினரின் தொடர் எதிர்ப்பால் மெர்சல் திரைப்படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது என்றும் தொடக்கத்தில் இருந்த கூட்டத்தை விட தற்போது திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக கருத்தைப் பரப்பிய பாஜக தலைவர்களே இப்போது மெர்சலாகி இருக்கிறார்கள்.

  • இசக்கி

-nakkheeran.in