மீனவர்கள் ஆவேசம் எதிரொலி.. ஜெயக்குமார் உறவினர்களின் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் அகற்றம்!

சென்னை : காசிமேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் விசைப்படகில் சீன நாட்டு எஞ்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதை எதிர்த்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக பிரச்னை எழுப்பி வரும் விவகாரம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் விசைப்படகுகளில் சீன என்ஜீன்களை பொருத்தி மீன் பிடித்து வருகின்றனர். விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்தப்பட்டதால் கடல் வளம் குறைந்து மீனவர்கள் மிகவம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மீனவளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையம் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இன்று காசிமேடு துறைமுகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியறுத்திய போதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிதறி ஓடிய மீனவர்களில் சிலர் அரசுப் பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் காசிமேடு வந்த போலீசார் மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி சீன எஞ்சின்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: