1எம்டிபி சம்பந்தப்பட்ட கேள்விகளை அவைத் தலைவர் தடுக்கிறார்

 

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த குறைந்தபட்சம் 10 1எம்டிபி சம்பந்தப்பட்ட கேள்விகளை நாடாளுமன்ற மக்களவைத் தலைவரின் அலுவலகம் நிராகரித்துள்ளது.

நிராகரிக்கப்பட்டவைகளில், எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் பிரதமர் அல்லது நிதி அமைச்சரிடம் கேட்டிருந்த 1எம்டிபி சம்பந்தப்பட்ட நான்கு கேள்விகளும் அடங்கும்.

அந்நான்கு கேள்விகள்:

  1. நிதி சேவைகள் சட்டம் 2013 இன் கீழ், பேங்க் நெகாரா 1எம்டிபிக்கு ரிம.115.8 மில்லியன் அபராதம் விதித்தது. அதைத் தொடர்ந்து, நாணயமாற்று கட்டுப்பாடு சட்டம் 1953 இன் கீழ் ஏன் அட்டர்னி ஜெனரல் 1எம்டிபி மீது குற்றம் சாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை?
  2. வெளிநாட்டில் அந்நிறுவனம் முதலீடு செய்வதற்கான மூன்று பெர்மிட்களை மத்திய வங்கி இரத்து செய்து யுஎஸ்$1.83 பில்லியனை (ரிம7.8 பில்லியனை) நாட்டிற்கு திருப்பிக் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு ஏற்ப 1எம்டிபி எடுத்துக்கொண்ட நடவடிக்களின் முன்னேற்றம் என்ன?
  3. 1எம்டிபி சம்பந்தப்பட்ட சொத்துகளை அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) கைப்பற்றியது பற்றி பிரதமர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைச் சந்தித்த போது விவாதித்தாரா? இல்லை என்றால், ஏன்?
  4. அதிபர் டிரம்பைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த தகரர்களுக்கு பெடரல் அரசாங்கம் எவ்வளவு பணம் கொடுத்தது, மற்றும் மலேசியப் பிரதிநிதிகள் குழு டிரம்ப் இண்டர்நேசனல் ஹோட்டல் & டவரில் தங்குவதற்கு எவ்வளவு செலவிடப்பட்டது?

1எம்டிபி ஆலோசனை வாரியம் 2009 ஆண்டில் அமைக்கப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டு அது இரத்து செய்யப்பட்ட வரையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதன் தலைவராக இருந்துள்ளார். நிதி அமைச்சர் என முறையில் அவர்தான் நிதி அமைச்சர் இன்கோர்பொரேசனின் தலைவர் (Head of Minister of Finance Inc- 1எம்டிபியின் ஒரே உரிமையாளர்.

அவைத் தலைவரின் நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது

இக்கேள்விகள் நிராகரிக்கப்பட்டது நாடாளுமன்ற மக்களவைத் தலைவரின் நேர்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று வான் அசிஸா செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

1எம்டிபி மீதான உண்மையான நிலைமையை மக்களிடமிருந்து மூடிமறைக்க நஜிப் ரசாக்கின் தலைமையிலான பிஎன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள மிக அண்மைய நடவடிக்கை இது என்று கூறிய அசிஸா, நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வின் போது கேட்கப்பட்ட 30 கேள்விகள்தான் மறுபடியும் கேட்கப்பட்டுள்ளன என்றார்.

ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட், இவை பதிலளிப்பதற்கு மிகச் சுலபமான கேள்விகள், 1எம்டிபி மீது பேங்க் நெகாரா விதித்துள்ள அபராதங்கள் பற்றிய விபரம், எடுத்துக்காட்டாக.

அவைத் தலைவரின் அலுவலகம், இரகசியங்கள் என்று வகைப்படுத்தியுள்ள விவகாரங்கள் அடங்கியுள்ளவற்றைக் கோரும் கேள்விகள் கேட்கப்படக்கூடது என்று கூறுகிறது. எது இரகசியம்? பேங்க் நெகார இந்தப் பிரச்சனை பற்றிய எதிரணித் தலைவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளது என்று காலிட் சாமாட் சுட்டிக் காட்டினார்.

1எம்டிபி விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது இதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது என்று காலிட் மேலும் கூறினார்.

இதற்கு முன்னதாக, பிகேஆர், டிஎபி, அமனா, பெர்சத்து மற்றும் பார்ட்டி வாரிசான் சாபா ஆகிய கட்சிகளின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைத் தலைவரின் முடிவை ஆட்சேபித்து ஒரு மனுவை கூட்டாக தாக்கல் செய்தனர். அந்த மனு எவ்வித விளக்கமுமின்றி நிராகரிக்கப்பட்டது.