வடக்கு- கிழக்கு தழுவிய கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குதிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியிலான கையெழுத்துத் திரட்டும் போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து இந்த கையெழுத்து திரட்டும் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் இன்று காலை தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து திரட்டும் போராட்டம், வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும், கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும், முன்னெடுக்கப்படவுள்ளது.

வீடுவீடாகச் சென்று பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவு திரட்டும் வகையில், கையெழுத்துக்களை பெறவுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

திரட்டப்படும் கையெழுத்துக்கள், சிறிலங்கா அதிபருக்கும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக, மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதில் பெருமளவு மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

-puthinappalakai.net

TAGS: