கந்துவட்டி: 6 முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளாத போலீஸ்.. அநியாயமாக பறி போன 3 உயிர்கள்!

நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள , காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா,அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்தனர். இதே பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீசாரிடம் சென்றுள்ளனர். போலீசாரும் கடன் கொடுத்தவருகளுக்கே ஆதரவாக செயல்பட்டனராம்.

கந்துவட்டி கொடுமை குறித்து கலெக்டர் அலுவலகத்தில், 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இசக்கிமுத்து புகார் கூறியுள்ளார். படுகாயம் அடைந்த நான்கு பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார்.

இதுகுறித்து சொந்த ஊரான காசித்தர்மத்தில் இந்த தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் அவரது வீட்டுமுன் திரண்டனர்.தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீசார் அந்தப்பகுதியில் விசாரணை நடத்தியதில் முத்துலட்சுமி,தளவாய்,ராணி,இசக்கியம்மாள்,மாதவி,உள்ளிட்ட ஏராளமானவர்களிடம் சிறு சிறு தொகையாக கடன் வாங்கியுள்ளார். தீக்குளித்த தம்பதியினர் ஏராளமான அளவு கடன் வங்கியுள்ளதாகவும் ,கடன்காரர்கள் கொடுத்த பணத்தைக்கேட்டு நெருக்கவே இந்தக்கடன்களை அடைக்க போதிய வருமானம் இல்லாததால் இந்த முடிவை இவர்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் 4 பேரும் தீக்குளித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பணம் கொடுத்தவர்களிடம் தென்காசி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டன் விசாரணை மேற்கொண்டார். தீக்குளிப்பு சம்பவம் குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறும்போது, “என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 லட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு இன்று மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர் என்றார். கந்து வட்டியின் கோரப்பசிக்கு ஒரு குடும்பமே கருகியதுதான் சோகமாகும்.

tamil.oneindia.com

TAGS: