“சைவர்களும் தீபாவளியும்” – ந.தருமலிங்கம்

‘ஞாயிறு’ நக்கீரன், உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி குதூகலித்தபின் சற்றே இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழர்கள், குறிப்பாக சைவ நெறியினை பின்பற்றும் அன்பர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடலாமா என்பது குறித்து மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர் ‘திருமுறை செம்மல்’ ந. தருமலிங்கம் அளித்த விளக்கத்தை தங்களின் மனதின் ஓரத்தில் பதிய வைப்பதும் அப்படியே தத்தம் மனத் தராசில் எடை போட்டுப் பார்ப்பதும் நாளைய வாழ்வில் ஏதோவொரு வகையில் நன்மையாக அமையலாம்.

சங்கத் தமிழிலக்கியம் படைக்கப்பட்ட காலத்தில், குறிப்பாக சிலப்பதிகாரம், திருக்குறள் உள்ளிட்ட செம்மாந்த இலக்கியப் படைப்புகள் இயற்றப்பட்ட காலத்தில் தமிழர்கள் தீபத்திருநாளைக் கொண்டாடியதில்லை;

அணுவாகவும் அண்டமாகவும் அண்டத்தின் பிண்டமாகவும் இருப்பதுடன் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான சிவபெருமானை சுத்தமான மனத்துடன் நினைத்தாலே போதும்; பக்தர்கள் முன் தோன்றி அருள் வழங்கும் கருணை மனம் கொண்டவர் பரமன் என்பது எத்தனையோ நாயன்மார் பெருமக்களின் வாழ்க்கை மூலம் நமக்கெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது;

குறிப்பாக, சடங்குகளால் இறைவனை வசப்படுத்த முடியாது. மாசற்ற மனதுடன் அவன் திருநாமத்தை ஓதி உணர்ந்தாலே போதும்; பரம்பொருளின் பெரும்பாக்கியம் நமக்கெல்லாம் கிட்டும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய சமயக் குரவர்கள் வாழ்ந்து காட்டியதுடன் தமிழோடு பக்தி இலக்கியத்தையும் வளர்த்தனர். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று தொடங்கும் பாடலை முதலாகக் கொண்டு சிவபுராணம் என்னும் செம்மாந்த பக்தி இலக்கியத்தை சமைத்த யோகியும் நாயனாரும் வாழ்ந்த காலத்தில் சைவ நெறிதான் போற்றப்பட்டதே யொழிய தீபாவளைத் திருநாள் கொண்டாடப்பட்டதில்லை.

மொத்தத்தில், சைவ சான்றோர்களான ஆழ்வார்களும் நாயன்மார் பெருமக்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டதில்லை; மாறாக, கார்த்திகைத் திங்களில் திருவிளக்கேற்றி அண்ணாமலையாரை வழிபட்ட மரபு பேரளவில் இருந்தது.

பன்றி உருவெடுத்த விஷ்ணுவிற்கும் பூமித் தேவிக்கும் பிறந்த நரகாசுரன் இறந்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படும் வழக்கு தமிழர்கள்மீது திணிக்கப்பட்டபின், கார்த்திகை தீப வழிபாட்டு முறை மங்கிவிட்டது. எனவே, சைவ நெறியைப் பின்பற்றும் தமிழர்கள் தீபாவளி நம் பண்டிகைதானா என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அண்மையில் கோலாலம்பூர், டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கத்தில் நடைபெற்ற சைவ நெறி கருத்தரங்கில் தருமலிங்கம் பேசினார்.

இதைப் பற்றி, தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் அன்பர்கள், குறிப்பாக சைவ நெறியாளர்கள் இதைப்பற்றி சிந்தித்துப் பார்ப்பதில் தவறில்லை.