தமிழ் உயர்நிலைப்பள்ளி – என்னதான் பிரச்சனை?


தமிழ் உயர்நிலைப்பள்ளி – என்னதான் பிரச்சனை?

ஞாயிறு நக்கீரன், அக்டோபர் 24, 2017.  தமிழர்கள், தங்களின் தாய்மொழியான தமிழுக்காக ஓர் உயர்நிலையைப்பள்ளியை இந்த நாட்டில் அமைத்துக் கொள்ளக் கூடாதா? முடியாதா?

மலேசியாவில் தமிழ் உயர் நிலைப்பள்ளியை அமைக்க சட்டத்தில் இடம் இல்லை என்று காலமெல்லாம் கல்வி அமைச்சு சொல்லி வருகிறது. அந்தச் சட்டம் எங்கிருந்து வந்தது? வானத்தில் இருந்து இறக்கிக் கொண்டுவரப்பட்டதா? அல்லது கடலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதா? மனிதர்களாகிய நாம்தனே அந்தச் சட்டத்தை இயற்றினோம். அந்தச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து தமிழ் உயர் நிலைப்பள்ளிக்கு அனுமதி அளிக்கக்கூடாதா?

நிச்சமாக முடியும்; பின் ஏன் தேசிய முன்னணி அரசின் கல்வி அமைச்சு செய்யவில்லை என்றால் அதற்கு மனம் இல்லை; அவ்வளவுதான்.

பூஜாங் பள்ளத்தாக்கிற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பை இன்றைய வரலாற்றுப் பாடம் சொல்லித் தருகிறதா? ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த வரலாற்றை விடுங்கள்; இருநூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் தமிழ்வழிக் கல்வி தொடர்கிறதே, இத்தகைய தமிழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியாவது இன்றைய வரலாறுப் பாடம் சொல்லித் தருகிறதா?

மலேசியாவில் தேசிய மொழி வளர்ச்சிக்காக ‘டேவான் பகாசா டான் புஸ்தகா’ தோற்றுவிக்கப்பட்டது கடந்த நூற்றாண்டில். ஆனால், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழிக்காக ‘டேவான் பகாசா டான் புஸ்தகா’(சங்கத் தமிழ்ச் சங்கம்) தோற்றுவிக்கப்பட்டதை மலேசிய மாணவர்கள் அறிவார்களா?  உலகிலேயே இத்தகையப் பெருமை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு என்பதை மலேசிய வரலாற்றுப் பாடம் சொல்லித் தருகிறதா? அதற்கு தெரிந்ததெல்லாம் தன் வரலாற்றை மட்டும் இயம்பிக்கொள்வதுதான்.

எதுவோ ஆகட்டும்; ஆனால், நூற்றுக் கணக்கான ஆரம்பப் பள்ளிகள் இருக்கும்பொழுது ஒரேவோர் உயர்நிலைப்பள்ளி இருந்தால் என்ன? தேசிய முன்னணிக்குத்தான்  மனமில்லை; மக்கள் கூட்டணி சார்பில் பினாங்கில் அமைந்துள்ள ஜசெக தலைமையிலான மாநில ஆட்சி தமிழ் மொழிக்காக ஓர் இடைநிலைப் பள்ளியை நிறுவ முன்வந்தால் அதற்கு உரிமம் அளிப்பதற்குக் கூட நஜிப் தலைமையிலான அரசுக்கு மனமில்லை; இதற்காகக் குரல் கொடுக்க டாக்டர் சுப்ரா தலைமையிலான மஇகா-வுக்கும் திராணியில்லை.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் உருமாற்றத்திற்காகவும் புதிய பள்ளிகளுக்காகவும் இத்தனை மில்லியன் வெள்ளியை வழங்கிவிட்டோம் என்று நஜிப் ஓயாமல் பிரச்சாரம் செய்வது ஒருபுறம் இருக்க, தமிழ்ப்பள்ளிகளுக்காக அத்தனை மில்லியன் வெள்ளியை செலவழித்து விட்டோம் என்று கமலநாதனும் தன் பங்கிற்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்க இதற்கெல்லாம் மஇகா தரப்பில் அவ்வப்பொழுது ஒத்தூதப்படுகிறது.

2008-ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில் அரசியல் ஆழி உருவானதற்கு ஹிண்ட்ராஃப் எழுச்சி காரணம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 2006, 2007-ஆம் ஆண்டுகளில் இந்த இயக்கம் எழுவதற்கும் எழுச்சி கண்டதற்கும் தேசிய முன்னணியும் மஇகா-வும்தான் காரணம் என்பதை எல்லோரும் அறிவர்.

இந்த அடிப்படையில்தான் பினாங்கிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அது முதலே பினாங்கு மாநிலத்தில் தமிழ் உயர்நிலைப் பள்ளி குறித்து முயற்சியும் முன்னெடுப்பும் தொடர்கின்றன. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆரம்பப் பள்ளிகள் இருக்கும் இந்த நாட்டில் ஒரேவோர் உயர்நிலைப் பள்ளியை உருவாக்க மனமில்லாவிட்டாலும் அதை உருவாக்க முனையும் மக்கள் கூட்டணி மாநில அரசுக்கும் சீனப் பெருஞ்சுவரைப் போல தடுப்புச் சுவர் எழுப்பிவரும் தேசிய முன்னணி அரசு, தமிழ் ஆரம்பப் பள்ளிகளையும் ஆலயங்களையும் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தியே மலேசிய இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்திற்கு போக்குக்காட்டி வருகிறது.

இந்தப் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் நாள் எந்த நாளோ?

‘Sekolah Menengah Tengah’ என்று தேசிய மொழியில் குறிப்பிடப்பட்டால் அதுதான் இடைநிலைப்பள்ளி ஆகும். முன்னர் ‘PMR’ அல்லது தற்பொழுது ‘PT3’ வரை மட்டும் கற்றுத்தரப்பட்ட(படும்) பள்ளியைத்தான் இடைநிலைப்பள்ளி என்பது வழக்கம். தற்பொழுது அத்தகையப் பள்ளிகள் நாட்டில் இல்லை; அப்படியே இருந்தாலும், ஏதோ ஓரோர் பள்ளி எங்கேயாவது இருக்கக்கூடும். அவ்வாறு இருந்தால், அந்தக் கல்விச்சாலையை இடைநிலைப்பள்ளி என்று அழைப்பதில் பிழையில்லை. மாறாக, மலேசிய உயர்க்கல்வி சான்றிதழ் என்னும் ‘எஸ்பிஎம்’ கல்வி பயிற்றுவிக்கப்படும் ‘Sekolah Menengah’ என்று தேசிய மொழியில் குறிப்பிடப்படும் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளி என்றுதான் அழைக்க வேண்டும்.

அதைவிடுத்து ஏன் இடைநிலைப்பள்ளி என வழங்கப்படுகிறதென்று தெரியவில்லை. இனியாவது சரியாக அழைப்போம். பினாங்கு மாநில அரசு, தமிழ் இடைநிலைப்பள்ளிக்குப் பதிலாக உயர்நிலைப் பள்ளி அமைப்பதில் தளராது முயற்சி காட்டட்டும். இதில், குந்தகத்தையும் இரண்டகத்தையும் செய்யும் தேசிய முன்னணிக்கும் அதில் உறுப்பியம் பெற்றுள்ள மஇகா-விற்கும் அந்த மஇகா சார்பில் கல்வித்துறை துணை அமைச்சராக இருக்கும் கமலநாதனுக்கும் காலம் கற்றுத்தரப்போகும் பாடத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • angamuthu Vethachalam wrote on 24 அக்டோபர், 2017, 22:04

  மலேசியாவில் தமிழ் உயர்நிலை பள்ளியைத் தவிற மற்றமொழி உயர்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன,அரசாங்கம் அவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளது.தமிழ் மொழிக்கு மட்டும் ஏன் அனுமதியில்லை?

 • en thaai thamizh wrote on 25 அக்டோபர், 2017, 11:46

  மலாயாவில் ஒரு காலத்தில் தமிழ் 7 -ம் வகுப்பு இருந்தது -தமிழ் ஆசிரியர்களை தயார் செய்ய. அது 1959 -இறுதியாக மலாக்காவில் இருந்தது என்று நினைக்கிறேன். சிங்கப்பூரில் உமறு புலவர் உயர்நிலை பள்ளி ஆரம்பிக்கப்பட்டது – ஆனால் சிங்கப்பூரின் கல்வி கொள்கை மாறியதால் அது தற்போது தமிழ் நிலையமாக இருக்கிறது.

 • s.maniam wrote on 25 அக்டோபர், 2017, 19:15

  நமது நாட்டில் தமிழ் உயர்நிலை பள்ளி அமைக்க படுமா ? படாதா ? கூடாதா ? முடியாதா ? இந்த கேள்விகளுக்குமுன் ! தேவையா ? தேவையில்லையா ? முதலில் இதற்கு விடை காணு ஓம் ! தமிழ் ஆரம்ப பள்ளிகளே அவள நிலையில் அரசாங்கத்தின் மானியத்தை நம்பி நடை போட்டு கொண்டிருக்கிறது ! கல்வி என்பது மத்திய அரசாங்கத்தின் கண் காணிப்பில் இருக்க வேண்டும் ! மாநில ரீதியாக இருந்தால் அது அரசியல் காழ்புணர்ச்சியால் அழிந்து போகும் ! நமது நாட்டின் கல்வி கொள்கையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் ! தமிழ் உயர் நிலை பள்ளியாக இருந்தாலும் ! தேசிய மொழியும் ! ஆங்கிலமும் தான் பிரதான மொழியாக இருக்கும் ! தமிழ் ஒரு படமாக தான் இருக்கும் ! அதையும் நமது மாணவர்கள் படிக்கவும் மாட்டார்கள் ! தமிழ் சோறு போடாது என்று நமது அருமை தமிழன் புறக்கணித்து விடுவான் ! ஆறு வருடம் தமிழ் பள்ளியில் தமிழ் பயின்ற தமிழன் தமிழை பயன்படுத்துகின்றனா
  ! இடை நிலை பள்ளிகளிலும் ! உயர் நிலை பள்ளிகளிலும் நமது தமிழின் போதனை முறை எந்த நிலையில் இருக்கிறது ! POL என்ற இடை நிலை பள்ளியின் தமிழ் போதனா முறையை மேம்படுத்தினாலே ! தமிழ் மேலும் மெருகுடன் வளரும் வாய்ப்பிருக்கிறது ! நம் நாட்டில் தமிழின் பயன் பாடு எந்த நிலையில் இருக்கிறது ! இந்தியர்களின் வியாபார நிறுவனங்களிலும் ! கடைகளிலும் ஆங்கிலம் தான் முதன்மை பெருகிறதே ஒழிய தமிழை காணவில்லை ! லிட்டெல் இந்தியா என்று எழுதி விட்டு தமிழை காணவில்லை ! வேருக்கு நீர் விடுங்கள் மலர்கள் தானாக மலரும் ! டிவி தீகா தமிழ் படம் ஒளிபரப்பவில்லை என்று முறையிட்டொம் ! தமிழனுக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் கேட்க்க தெரியாது என்றார் ! தானை தலைவன் ! சினிமாவை கேட்க்க வில்லை எங்கள் தமிழ் உரிமையை வலியுறித்தினோம் ! பல்கலை கழகங்களில் நமது இந்திய மாணவர்களின் என்னிக்கை குறைகிறது என்றோம் ! நாமே பல்கலை கழகம் அமைத்துக்கொள்வோம் என்று தானை தலைவன் தானும் தன் சந்ததியும் சம்பாதிக்க ஒரு பல்கலை கழகம் அமைத்து கொண்டான் ! தமிழ் உயர் நிலை பள்ளி அமைக்க அரசாங்கம் அனுமதி தந்தாலும் அது நமது தலைவர்கள் பணம் பண்ணும் நிறுவனமாகத்தான் உருவெடுக்கும் ! சாமான்ய தமிழனுக்கு எந்த பயனும் விளையாது !

 • en thaai thamizh wrote on 26 அக்டோபர், 2017, 8:21

  ஐயா s . maniam அவர்களே நீங்கள் கூறுவது உண்மை. நம்மவர்களுக்கு மொழிப்பற்றும் இனப்பற்றும் கிடையாது. தமிழில் பேசுவதே குறைவு– அதுவும் பலர் தமிழை விட மலாய் ஆங்கிலம் பேசவே செய்கின்றனர். என்ன சொல்ல?

 • தேனீ wrote on 26 அக்டோபர், 2017, 22:28

  #நாமே பல்கலை கழகம் அமைத்துக்கொள்வோம் என்று தானை தலைவன் தானும் தன் சந்ததியும் சம்பாதிக்க ஒரு பல்கலை கழகம் அமைத்து கொண்டான்! #

  அதில் நமக்கும் பங்கு கிடைக்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு தெரிகின்றது. தானைத் தலைவர் என்ன ஏதும் அறியாத சின்னப் பிள்ளையா?

 • தேனீ wrote on 26 அக்டோபர், 2017, 22:32

  மெர்ட்டேக்கா பல்கலைக்கழத்தைப் பெற முடியாத சீனர் பிந்நாளில் ‘UTAR’ பல்கலைக்கழத்தைப் பெறவில்லையா.

  எல்லாம் கொஞ்சம் சிந்தித்ததால் அது சீனர் பெற்ற பயன். இங்கே தமிழ் அரசியவாதிகளுக்குச் சிந்திக்க நேரமில்லை. அப்புறம் எப்படி தமிழ் உயர்நிலைப் பள்ளியை நிறுவமுடியும்?

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: