சுகாதார அமைச்சர் : சில மருத்துவமனைகளில் மருந்துகள் குறைவாக இருப்பது உண்மைதான்

சில மருத்துவமனைகளில், குறிப்பிட்ட சில மருந்துகள் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொண்ட சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், ஆனால், அதற்கும் ‘நிதி சிக்கலுக்கும்’ சம்பந்தம் இல்லை என்றார்.

“தளவாடங்கள், விநியோகப் பிரச்சனைகளால் சில மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் போய் சேருவதில்லை, இதனால் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. அது போன்ற சமயங்களில், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும்படி மருத்துவமனைகளுக்கு நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

“திட்டமிட்டபடி சில நிறுவனங்கள் மருந்துகளை வழங்காத சம்பவங்களும் உண்டு. இதன் விளைவாக, மருத்துவர்கள் சில மருந்துகளை மாற்றி கொடுக்கின்றனர். இதனால், மக்கள் அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என நினைக்கிறார்கள்,” என , இன்று சுகாதார அமைச்சுக்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பவுண்டேஷனுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒரு நிகழ்ச்சியின் போது அவர் கூறினார்.

அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக, மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எஃப்எம்டி வெளியிட்ட செய்தி தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார்.

நிதி பற்றாக்குறை காரணமாக, சில சூழல்களில் நோயாளிகளைச் சுயமாக மருந்துகள் வாங்க அல்லது வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ள அரசு மருத்துவர்கள் பணிப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

சாதாரண நோய்களைக் குணப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை மருந்துகள் அவசியம் இருப்பதை அமைச்சகம் உறுதிப்படுத்தி வருவதாக டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

“புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள் அதிக விலை. ஒரு நோயாளியைக் குணப்படுத்த ரிம 100,000 ஆகுமென்றால், அது நமக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. ஆக, இதுபோன்ற சமயங்களில் மருத்துவர்கள் ஒரு தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்,” என்றார் அவர்.

இருப்பினும், 98% மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்க, நிதி அமைச்சு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பதாக டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.