தொழிலாளர் பாதுகாப்புக்கு முத்தரப்புப் பணிக்குழு அமைப்பீர்: பினாங்குக்கு எம்டியுசி அறிவுறுத்து

தஞ்சோங்   பூங்கா   நிலச்சரிவு   குறித்து   விசாரிக்க   மாநில   விசாரணை   ஆணையம்   அமைக்கப்பட்டிருப்பதை     வரவேற்கும்   மலேசிய    தொழிற்சங்கக்   காங்கிரஸ்(எம்டியுசி),   “கட்சி  சார்பற்றவர்கள்,  திறமைசான்றவர்கள்,   தகுதிவாய்ந்தவர்கள்”    ஆணைய   உறுப்பினர்களாக  நியமிக்கப்பட     வேண்டும்   என்று    கேட்டுக்கொண்டுள்ளது.

மாநில    அரசு,  கட்டுமானப்    பகுதிகளில்   மட்டுமல்லாமல்   தயாரிப்புத்   தொழில்    சம்பந்தப்பட்ட   இடங்களிலும்    அதிகமான    தொழிலாளர்களைக்  கொண்டுள்ள   மற்ற  துறைகளிலும்   பாதுகாப்பைக்  கண்காணிக்க   “முத்தரப்புப்  பணிக்குழு”   ஒன்றை   அமைப்பது    குறித்தும்     ஆலோசிக்க   வேண்டும்    என்று   எம்டியுசி   பினாங்குச்   செயலாளர்  கே.வீரையா   கூறினார்.

“இதற்கான    அதிகாரத்தை  பணியிடச்  சுகாதாரம்   மற்றும்   பாதுகாப்புத்   துறை     கொண்டிருப்பதாக   சிலர்   வாதிக்கலாம்.  ஆனால்,   தொழிலாளர்களின்  பாதுகாப்பிலும்    நலனிலும்   முதலாளிமார்களுக்கும்   தார்மீக  மற்றும்   கார்ப்பரட்   பொறுப்பு   இருக்க    வேண்டும்   என்பதுதான்   எங்கள்  கருத்தாகும்”,  என  வீரையா  மலேசியாகினியிடம்    கூறினார்.

“அதன்   நீட்சியாக  வேலை   செய்யுமிடம்   பாதுகாப்பாக   இருப்பதை   உறுதிப்படுத்தும்   அதே   தார்மீக   பொறுப்பு   அரசுக்கும்   உண்டு”,  என்றாரவர்.

அம்மாநிலத்தில்    குறுகிய   கால   இடைவெளியில்   இரண்டு   சோகச்   சம்பங்கள்   நிகழ்ந்திருப்பது     அதிர்ச்சி   அளிப்பதாகவும்    வீரையா   குறிப்பிட்டார்.

அவ்விரண்டும்-   தஞ்சோங்    பூங்கா  நிலச்  சரிவு,   வடக்கு- தெற்கு    நெடுஞ்சாலை   விபத்து-   “முழுமையாகவும்   விரிவாகவும்”    விசாரிக்கப்பட     வேண்டும்     என்றாரவர்.