பிரதமரின் அமெரிக்கப் பயணச் செலவை வெளியிட அரசாங்கம் மறுப்பு

அண்மையில்    பிரதமர்    நஜிப்   அப்துல்    ரசாக்    வெள்ளை   மாளிகைக்குச்   சென்று   வந்ததற்கான   செலவைத்   தெரிவிப்பதற்கு    புத்ரா  ஜெயா   மறுத்து    விட்டது.

இன்று   நாடாளுமன்றத்தில்    எழுத்து    வடிவில்    வழங்கிய    பதிலில்   சட்ட   அமைச்சர்   அஸலினா    ஒத்மான்  1980  நாடாளுமன்ற    உறுப்பினர்  (பணிக்கான   செலவு)  சட்டத்தின்படி   அதற்குச்   செலவிடப்பட்டதாகக்  கூறினார்.

“விமானப்   பயணம்,  தங்கும்வசதி,   போக்குவரத்து,   உணவுப்படி,   சலவைச்   செலவு,    தொலைபேசிக்   கட்டணங்களும்   மற்றவையும்    அதில்    உள்ளடக்கம்”   என   அஸலினா   கூறினார்.

எது    எதற்கு   எவ்வளவு    செலவிடப்பட்டது     என்பதை   அவர்   வெளியிடவில்லை.

அந்தோனி   லோக் (டிஏபி-  சிரம்பான்)  கேட்டிருந்த    கேள்விக்கு    அஸலினா  இந்தப்   பதிலை    வழங்கியிருந்தார்.

புத்ரா   ஜெயா    செலவான   உண்மைத்தொகையை   வெளியிடாதது   அது   எதையோ   மறைப்பதைக்   காட்டுகிறது   என  லோக்  கூறினார்.

“நியாயப்படுத்த   முடியாத     அளவுக்குச்   செலவினம்   கூடி  விட்டதா?  ஆடம்பரச்   செலவா,  அதைக்  கண்டு   மக்கள்   ஆத்திரமடைவார்கள்    என்ற    அச்சமா?”,   என்றவர்   வினவினார்.