பி.எஸ்.எம். : தஞ்சோங் பூங்கா நிலச்சரிவு, ஓர் எச்சரிக்கை ஆகும்

கடந்த அக்டோபர் 21, அதிகாலை, தஞ்சோங் பூங்கா கட்டுமானத் தளத்தில் 11 உயிர்களைப் பலிகொண்ட நிலச்சரிவு ஒரு துயரகரமான சம்பவம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் ச்சூ சுன் காய் தெரிவித்தார்.

இச்சம்பவம், பினாங்கு மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கே ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.  பெருநிறுவனங்களின் இலாபத்தை முன்னிலைப்படுத்தும் நமது அரசாங்கம், இனி அத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்ய, ஆலோசனை பெற, மாற்றி அமைக்கவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக, பி.எஸ்.எம். பாயான் பாரு கிளையின் தலைவருமான ச்சூ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாண்டுவரும் அரசு சாரா அமைப்புகளை அச்சுறுத்துவதை, டிஏபி தலைமையிலான பினாங்கு மாநில அரசாங்கம் நிறுத்திகொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“மாநிலத்தில் கட்டுபாடற்ற நிலையில், அபாயகரமான சூழல்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் சமுதாய அக்கறை கொண்ட குழுக்களுக்கு எதிரான, மாநில அரசின் முட்டாள்தனமான மற்றும் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார் ச்சூ.

“பினாங்கு அரசு சாரா அமைப்புகள், குறிப்பாக ‘பினாங்கு ஃபோரம்’  முன்வைத்துள்ள ஆலோசனைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். மலைச்சாரல்களில் நடக்கும், அனைத்து மேம்பாட்டுத்  திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் சீர்குலைவுகளைத் தடுப்பதோடு, அனைத்து கட்டுமான தளங்களிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வேண்டும்,” என்று ச்சூ மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பேரிடர் மனிதர்களின் அக்கறையின்மையால் ஏற்பட்டது, எனவே, அனைத்து தரப்பினரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்; அதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ச்சூ வலியுறுத்தினார்.