பயங்கரவாத அமைப்புகளால் பாகிஸ்தான் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தல் அமெரிக்கா எச்சரிக்கை

புதுடெல்லி,

தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா – அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.

அண்டைய நாடுகளில் தாக்குதல் நடத்த தன் மண்ணில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிராந்தியத்தில் குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பும், அமைதியான சூழலும் நிலவுவதை உறுதி செய்ய முடியும் என இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

டில்லர்சன் பேசுகையில், பாகிஸ்தான் பயணத்தின்போதே தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். அமெரிக்காவும், இந்தியாவும் இயல்பான கூட்டணியை கொண்ட நாடுகள். எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தோளோடு தோள் கொடுக்கும் என்று கூறினார்.

‘‘பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் அந்த நாட்டின் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படும். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதை ஏற்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறோம். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இந்தோ–பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவும் இந்தியாவும் இன்னும் ஒருங்கிணைந்து செயல்படும்’’ எனவும் குறிப்பிட்டார் டில்லர்சன்.

-dailythanthi.com