கந்து வட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளிப்பு, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை,

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் நேற்று முன்தினம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கந்து வட்டிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை மாற்றக்கோரியும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது.

‘மறைந்த ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போது கந்து வட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தார். ஆனால் தற்போதையை அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர்.’ எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

கந்து வட்டி கொடுமை குறித்து இசக்கிமுத்து 6 முறை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 6 முறை மனு கொடுத்தும் போலீஸ் சூப்பிரண்டு அதில் நேரடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு 6 மனுக்களையும் மீண்டும், மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு சம்பிரதாயமாக அனுப்பி பொறுப்பை தட்டி கழித்துள்ளார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கந்துவட்டி கொடுத்தவர்களின் கொடுமை மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமை காரணமாக 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது, இன்னும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

“கந்து வட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை மட்டும் அளிக்கவில்லை, போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்புக்களை முழுமையாக தட்டி கழித்து உள்ளனர் என்பதை காட்டுகிறது. மாநிலம் முழுவதும் கந்துவட்டி கொடுமை சம்பவம் நடக்கிறது, கடன் கொடுப்பவர்களால் கந்துவட்டி வசூலிக்கப்படுகிறது, கடன் வாங்கியவர்கள் கொடுக்க தவறினால் அவர்களை உடல் அளவிலும், மனதளவில் தாக்கப்படும் கொடுமையும் இருக்கிறது,” என கூறி உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரிகள் இவ்விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத சம்பவத்திற்கு கவலையையும் தெரிவித்து உள்ளது.

-dailythanthi.com

TAGS: