ரோஹிஞ்சா நெருக்கடி: மியான்மருக்கான ராணுவ உதவியை விலக்கிக்கொள்கிறது அமெரிக்கா

மியான்மரில் ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா மக்கள் நடத்தப்படும் விதம் காரணமாக, மியான்மரில் உள்ள தனது ராணுவ உதவிக் குழுக்களை திரும்பப் பெருகிறது அமெரிக்கா.

மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கான பயண சலுகை முறையை நிறுத்தியுள்ளதாகவும், பொருளாதார தடை குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளது அமெரிக்க வெளியுறவுத் துறை.

கிட்டத்தட்ட பத்து லட்சம் ரொஹிஞ்சாக்கள், மியான்மரில் இருந்து தப்பி வங்கதேசத்திற்கு வந்துள்ளதாக, ஐ.நாவுக்கான வங்கதேசப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

மியான்மர் ராணுவம், தாங்கள் தீவிரவாதிகளோடு சண்டையிடுவதாகவும், பொதுமக்களை குறிவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

“எந்த தனி நபரோ அல்லது குழுவோ கொடுமைகளுக்குக் காரணமாக இருந்தாலும், அவர்களை அதற்குப் பொறுப்பாக்குவது அவசியம்” என்கிறது அமெரிக்க வெளியுறவுத்துறை.

“சமீபத்தில் ரக்கைன் மாநிலத்தில் நடந்த நிகழ்வுகள், ரொஹிஞ்சா மற்றும் பிற சமூக மக்களுக்கு ஏற்பட்ட கொடுமையான, அதிர்ச்சியளிக்க கூடிய விஷயங்களுக்காக நாங்கள் எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.”

ரொஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்கள் பகுதியில் நடந்தவற்றிற்கு, மியான்மர் ராணுவ தலைமையையே பொறுப்பு என கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் டில்லர்சன் கூறியதோடு, இந்த சூழல் குறித்து, “தீவிரமான அக்கறையுடன்” தாங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஐ.நா சபை, இந்த வன்முறைகளை, “இன சுத்திகரிப்பு என்பதற்கான மிகச் சரியான எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளது.

ஆகஸ்டு மாதம் முதல், ஆறு லட்சம் அகதிகள் மியான்மரில் இருந்து வெளியேறியுள்ளனர். ஏற்கனவே நடந்த வன்முறைகளால் வெளியேறிய மூன்று லட்சம் மக்களோடு இவர்கள் சேர்கிறார்கள் என்றார், ஐ.நாவிற்கான வங்கதேச தூதர்.

ஆயிரக்கணக்கானோர் தினமும் அவர்கள் நாட்டினுள் நுழைவதாக அவர் தெரிவித்தார்.

பல தலைமுறைகளாக, ரொஹிஞ்சாக்கள் மியான்மரில் வசித்தாலும், அவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்த நாடற்ற அகதிகளாகவே மியான்மர் அரசு கருதுகிறது.

ஆகஸ்டு 25ஆம் தேதி பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்பு, நாட்டின் பாதுகாப்புப்படை ரக்கைனில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக மியான்மர் கூறுகிறது.

ஆனால் அகதிகளோ, தாங்கள் ஒவ்வொறு வீடுகளிலும் கொலைகளை கண்டதாகவும், பல கிராமங்கள் தீ வைக்கப்பட்டதை கண்டதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலை பிபிசி செய்தியாளர் ஜானத்தன், தானாகவே அங்கு சென்று பார்த்து உறுதியும் செய்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் மோதல்களை நிறுத்தவேண்டும் என்றும், மக்களை அமைதியான மறு குடியேற்றம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால், ரொஹிஞ்சாக்களை அங்கீகரிக்க தொடர்ந்து மியான்மர் மறுப்பதே, எந்த வகையான பேச்சுவார்த்தைக்கும் தடைக்கல்லாக உள்ளதாக வங்கதேச தூதர் திங்களன்று தெரிவித்தார். -BBC_Tamil