டிஎபி இங்: சீனமொழிப்பள்ளிகளுக்கு ரிம65 மில்லியன் கொடுக்கப்பட்டால், மன்னிப்பு கோருவேன்

 

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் சீனமொழிப்பள்ளிகளுக்கு ரிம65 மில்லியன் கொடுக்கப்பட்டால், டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இங் வே அய்க் துணைக் கல்வி அமைச்சர் சோங் சின் வூனிடம் மன்னிப்பு கோருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

தமது அமைச்சு சீனப்பள்ளிகளுக்கு இந்த நிதியை (ரிம65 மில்லியனை) குறுகிய காலத்தில் பகிர்ந்தளிக்கும் என்று சோங் கூறிக்கொண்டதற்கு, இங் ஆட்சேபம் தெரிவித்தார் ஏனென்றால் இந்நிதி கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகும்.

“சீன தொடக்கப்பள்ளிகளுக்கும் இடைநிலைப்பள்ளிகளுக்கும் முறையே ரிம50 மில்லியனும் ரிம15 மில்லியனும் ஒதுக்கப்பட்டன. இது நல்ல செய்தி.

“இந்தப் பணம் பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதும் நான் மன்னிப்பு கோர வேண்டும் என்று சோங் எனக்கு சவால் விட்டார்.

“தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், நவம்பர் பள்ளி விடுமுறைக்கு முன்னர் அப்பணம் பகிர்ந்தளிக்கப்பட்டால், நான் மன்னிப்பு கோருவதற்கு தயாராகவுள்ளேன்”, என்று இங் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், கல்வி அமைச்சுக்கு வந்து மசீச இளைஞர் தலைவரான சோங்கிடம் நேரடியாக மன்னிப்பு தெரிவிக்க அனுமதி கோரும் கடிதத்தையும் அவருக்கு அனுப்புவேன் என்று இங் கூறினார்.

இச்செய்தியாளர் சந்திப்பில், இங் மாண்டரின் மொழியில் ஜேக்கி சியங்கின் “நான் மலர்கள் வாடி வதங்கிப் போகும் வரையில் காத்திருந்தேன்” என்ற பாடலைப் பாடி துணைக் கல்வி அமைச்சர் சோங்கை கிண்டல் செய்தார்.

இந்த நிதி ஒதுக்கீடு 2017 ஆம் ஆண்டிற்கானது என்றும் வழக்கமாக நிதி பகிர்ந்தளிப்பு ஆண்டின் இந்தக் காலத்தில்தான் செய்யப்படும் என்றும் சோங் வலியுறுத்திக் கூறினார் என்று த ஸ்டார் செய்தி தெரிவிக்கிறது.