பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக இமயமலையில் தியான மண்டபம் கட்டிய ரஜினிகாந்த்

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். ‘ராகவேந்திரா’ படத்தில் ராகவேந்திரராகவே நடித்துள்ளார். பாபாஜியின் தீவிர பக்தராகவும் இருக்கிறார். அவர் நடித்த ‘பாபா’ படத்தில் இமயமலை சென்று ஞானம் பெறுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன.

ஆண்டுதோறும் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதுவரை 6 தடவை இமயமலைக்கு சென்று வந்து விட்டார். இமயமலை பயணத்தின்போது காவி வேட்டி கட்டிக் கொள்வார். தெருவோர கடைகளில் உணவு வாங்கி நின்று கொண்டு சாப்பிடுவார். தரையில் துண்டை விரித்து படுத்து தூங்குவார்.

இமயமலையில் பாபாஜி குகையை வழிபட வரும் பக்தர்களுக்கு ஓய்வெடுக்கவும் தங்குவதற்கும் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு தியான மண்டபமும் ஓய்வு அறையும் கட்டிக்கொடுக்க ரஜினிகாந்த் முடிவு செய்தார். தனது நெருக்கமான நண்பர்கள் 7 பேருடன் இணைந்து பாபாஜி குகை அருகில் இடம் வாங்கி அதில் தியான மண்டபம் கட்டி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள துவாகராட் என்ற இடத்தில் இந்த மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. ரூ.1 கோடி செலவில் இந்த தியான மண்டபம் உருவாகி உள்ளது. பரமஹம்ச யோகானந்தர் நிறுவிய சத்சங்க் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொண்டு அமைப்பிடம் தியான மண்டபத்தை ஒப்படைத்து உள்ளார்.

தியானமண்டபத்தில் 30–க்கும் மேற்பட்டோர் தங்கிக்கொள்ளலாம். தியானமும் செய்யலாம். இந்த மண்டபத்தின் திறப்புவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 10–ந்தேதி நடக்கிறது என்று அதன் அறங்காவலர் வக்கீல் விஸ்வநாதன் அறிவித்து உள்ளார்.

-dailythanthi.com