தியன் சுவா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்

 

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா ஒரு மாதச் சிறைதண்டனைக்குப் பிறகு இன்று காஜாங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சிறை அதிகாரிகள் தம்மை காலை மணி 5.00 க்கு படுக்கையிலிருந்து எழுப்பி விட்டு பின்னர் காலை மணி 7.00 அளவில் அதிகாரப்பூர்வமாக விடுவித்தனர் என்று தியன் சுவா கூறினார்.

அவரது ஆதரவாளர்கள் சிறைக்கு அருகிலுள்ள அங்காடிக் கடையில் காத்திருந்த பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று சிறையிபிருந்து அவருடைய காரில் வந்து இறங்கிய தியன் சுவாவைச் சந்தித்தனர்.

காஜாங் சிறைச்சாலைக்கு வெளியில் அவரை பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி ஆகியோர் வரவேற்றனர்.

காலை மணி 9.00 க்கு விடுவிக்கப்பட வேண்டிய அவரை காலை மணி 7 க்கே விடுவித்து விட்டனர், மக்கள் கூட்டம் கூடிவிடும் என்ற அச்சத்தில். என்று தியன் கூறினார்.

2012 ஆம் ஆண்டில், பெர்சே 3 பேரணியின் போது கட்டுப்படுத்தப்பட்ட போலீஸ் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும்படி போலீஸ் இட்ட உத்தரவை மீறியதற்காக தியன் சுவாவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், கடந்த மாதம் அந்த மேல்முறையீட்டை திரும்பப் பெற்றுக்கொண்ட தியன் சுவா, சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டார்.

தியன் சுவாவை வரவேற்றவர்களில் பிகேஆர் வனிதா தலைவர் ஸுரைடா கமாருடின், பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஹி லோய் சியான், எலிசபெத் வோங், மரியா சின் அப்துல்லா மற்றும் சுவாராம் ஆலோசகர் அமிர் அப்துல் ஹாடி ஆகியோரும் அடங்குவர்.

சற்று இளைத்துக் காணப்பட்ட தியன், தாம் அதை உணரவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.

“உணவு ஓகே.”, என்றாரவர்.