தென்பகுதியில் தமிழர் பிரச்சனை

தென்பகுதியில் தமிழர் பிரச்சனை தொடர்பில் ஆதரவான கருத்துக்களை வெளியிடுபவர்கள் பாரிய பிரயத்தினத்திற்குள்ளாகுகின்றார்கள்…
(கிழக்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்)

தென்பகுதியில் தமிழர் பிரச்சனை தொடர்பில் ஆதரவான கருத்துக்களை வெளியிடுபவர்கள் அங்கு பாரிய பிரயத்தினத்திற்குள்ளாகுகின்றார்கள் என்கின்ற விடயத்தைக் கவனத்தில் கொண்டு எமது தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்கள் எல்லோரும் சிறந்த தீர்வு ஒன்றுக்கான எமது நிகழ்ச்சி நிரலை அமைத்துக் கொண்டு ஒரே தலைமையின் கீழ் செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

செங்கலடியில் இடம்பெற்ற பாடசாலை ஒன்றின் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை பற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவாறான கருத்துக்கள் வெளிவருகின்றன. இது தொடர்பில் நேற்றைய அமைச்சரைவையின் பின்னரான ஊடகவியலாளர் கலந்துரையாடலில் அமைச்சரவைப் பேச்சாளர் பலவேறு விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் போது தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது இந்த நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தமிழ் மக்களின் எழுச்சிகள் தொடர்பாகவும் அவர் பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

முக்கியமானதொரு விடயம் என்னவெனில் ஊடகவியலாளர்கள் தங்களுக்குள்ளே கருத்து முரண்பாடுகளுடன் இருக்கின்றார்கள். பல ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பல உண்மையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். ஐம்பதுக்கு ஐம்பது பிரச்சினை எவ்வாறு வந்தது, தமிழ் மக்களின் போராட்டங்கள் எவ்வாறு தோன்றியது என்றெல்லாம் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இவையெல்லாம் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே பிரச்சினை இருக்கின்றன, அந்த அடிப்படையில் அரசியல் அமைப்பின் மூலமான அரசியற் தீர்வு இங்கு வேண்டும் என்று ஊடகவியலாளர்களே சொல்லியிருக்கின்றார்கள்.

அரசியலமைப்பு விடயம் பற்றி முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ண அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குபவர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார். இதனை அமைச்சரவைப் பேச்சாளர் வன்மையாகக் கண்டித்திருக்கின்றார். அதே போல் விமல் வீரவன்ச அவர்கள் இந்த அரசியலமைப்புக்கு ஆதரவாக பாராளுமன்றம் செயற்பட இருக்கின்றது என்றும் பாராளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார். இதனை விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த அமைப்பாளர் ஒருவரே கண்டித்திருக்கின்றார்.

ஒரு பெரும்பான்மை அரசவைப் பேச்சாளர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆளமான கருத்துக்கள் வெளியிடுவதும், பெரும்பான்மையின மக்களில் பலர் அரசியல் தீர்வு தேவை எனக் கருத்து வெளியிடுவதுமான செயற்பாடுகள் அனைத்தும் தென்பகுதி மக்கள் அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் அதனூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியும் மிகவும் ஆரோக்கியமான கருத்தாடல்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் அதற்கு எதிரான கருத்துக்களும் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதனையுமே இவை காட்டுகின்றன.

எமது பிரச்சினை தொடர்பில் தென்பகுதியில் இவ்வாறான கருத்தாடல்களை இடம்பெறுகின்ற வேளையில் எமக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுபவர்கள் அங்கு பாரிய பிரயத்தினத்திற்குள்ளாகுகின்ற விடயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு எமது தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்கள் எல்லோரும் சிறந்த தீர்வு ஒன்றுக்கான எமது நிகழ்ச்சி நிரலை அமைத்துக் கொண்டு ஒரே தலைமையின் கீழ் எமது செயற்பாடுகளை மிகவும் உறுதியோடும், கவனத்தோடும், பக்குவத்தோடும் செயற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

-tamilcnn.lk

TAGS: