இளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை..!.

நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டோம், மன்னித்து கொள்ளுங்கள்’ இளஞ்செழியனுக்கு தற்கொலை செய்த தாய் எழுதிய கடிதம்,

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்த பெண்ணால் எழுதி வைக்கப்பட்ட கடிதமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தனது தாய் வீட்டாருக்கும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகியோருக்கு இவ்வாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
குறித்த கடிதத்தில் ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து தனது கணவன் ஏமார்ந்த நிலையில் தற்கொலை செய்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், தனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு தன்னால் பதில் கூற முடியாத நிலையிலேயே குடும்பத்துடன் தான் தற்கொலை செய்துள்ளதாக மிகவும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

அத்துடன், தனதும் தனது பிள்ளைகளினதும் இறுதிக் கிரியைகளை தனது வீட்டார் நடத்த வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் தனது கணவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸாரிடம் குறித்த கடிதத்தைக் காட்டி எந்தப் பிரச்சினையும் இல்லாம் தனது இறுதிக் கிரியைகளை மிகவும் எளிமையான முறையில் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு எழுதி வைத்த கடிதத்தில், தனது கணவன் 1 கோடியே 17 இலட்சம் ரூபாவைக் கொடுத்து ஏமார்ந்ததனால் கடந்த 09 ஆம் மாதம் 03 ஆம் திகதி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவன் உயிரிழந்த காலத்தில் இருந்து தனது பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றும், அப்பா எப்ப வருவார், அப்பா கண் திறந்து விட்டாரா, எப்ப பார்ப்பார், ஏன் வரவில்லை, போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளை தானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா, அப்பா வர நாங்கள் பார்க்குப் போவம் என்ற என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை.

தவறு செய்தவர்களை விட தவறு செய்யத் தூண்டுபவர்களே குற்றவாளி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி வீதியைச் சேர்ந்த சுநேத்திரா என்ற 28 வயதுடைய தாய், கர்சா என்ற 04 வயதுடைய மகள், சஜித் என்ற 2 வயதுடை மகன் மற்றும் சரவணா என்ற ஒரு வயதுடைய மகன் ஆகியோர்கள் இன்றைய தினம் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான கிருசாந்தன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடன் தொல்லை காரணத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளுக்கும் உணவில் விஷத்தை கலந்து சாப்பிடக் கொடுத்த தாய், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் நுண்கடன் தொல்லையால் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் இவ்வாறு கடன் வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக அமைப்புகள் கோரி வருகின்ற நிலையில், இன்றைய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

-athirvu.com

TAGS: