நடிகர் கமல்ஹாசன் விவசாயிகளுடன் கலந்துரையாடல் சென்னையில் 4-ந் தேதி நடக்கிறது

சென்னை,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வேளாண் தொழில் நலிவடைந்து உள்ளது. முற்போகம் விளைந்த இடத்தில் ஒரு போகம் தான் விளைகிறது. விவசாயிகளுக்கு புதிய கடன்கள் மறுக்கப்படுகிறது.

விவசாயிகள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தில், தனியாரை அனுமதித்ததால் 40 சதவீதம் விவசாயிகளுக்கு இன்னும் பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்பட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் வருகிற 4-ந் தேதி (சனிக் கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடுகின்றனர். இந்த கூட்டம் விவசாயிகள் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் சங்க கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏன்? என்று பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டதற்கு, ‘நடிகர் கமல்ஹாசன் முற்போக்கு சிந்தனையாளர். தமிழகத்தில் விவசாயம் தான் அரசியல் என்று கூறி வருகிறார். எனவே அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மேலும் கமல்ஹாசன் நடிகர் என்பதால் மக்களிடையே விவசாயிகள் பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார்.

பேட்டியின்போது விவசாய சங்க நிர்வாகி அசோக் லோதா உடன் இருந்தார்.

-dailythanthi.com