கேட்டலோனியா அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது ஸ்பெயின்

கேட்டலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தை கலைத்த ஸ்பெயின் அரசாங்கம் கேட்டலோனியா அரசாங்கத்தின் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றம் ஸ்பெயினிருந்து பிரிந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஸ்பெயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஸ்பெயின் அரசாங்கம் வெளியிட்ட ஒரு அதிகாரபூர்வ அறிக்கை கேட்டலோனிய பிராந்திய அரசில் அங்கம் வகித்தவர்களை ஒட்டுமொத்தமாக நீக்கியது. மேலும், பிராந்திய நிர்வாகம் ஸ்பெயின் துணை பிரதமர் சோராயா சேன்ஸ் டி சாண்டாமரியாவின் கட்டுப்பாட்டிற்குள் வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

முன்னர், கேட்டலோனியாவின் மூத்த போலீஸ் அதிகாரிகள் ஸ்பெயின் அரசாங்கத்தால் நீக்கப்பட்டனர்.

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும், கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்வதாகவும் ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்தார். மேலும், அங்கு திடீர் பிராந்திய தேர்தல்களை நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டார்.

இச்சூழலில், சுதந்திரம் வழங்கப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இன்றைய தினம் (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மேட்ரிட்டில் ‘ஒற்றுமையான ஸ்பெயின் மற்றும் அரசியலமைப்பு சட்டம்’ ஆகியவற்றை வலியுறுத்தி பேரணி ஒன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil