காணாமல் போன 780 மொழிகளை கண்டறிந்த மொழி ஆர்வலர்

இந்திய மொழிகள் பற்றிய தனது தேடலைத் தொடங்கியபோது, இறந்த மற்றும் இருந்துகொண்டிருக்கும் தாய் மொழிகளின் சுடுகாட்டுக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்று நினைத்தார் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான கணேஷ் தேவி.

ஆனால், மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு நாட்டின், இரைச்சல் மிகுந்த “மொழிகளின் அடர்ந்த காட்டுக்குள்” அவர் சென்றார்.

இமைய மலையில் அமைந்துள்ள இமாச்சல பிரதேச மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியில், பனியைக் குறிக்க மட்டும் சுமார் 200 சொற்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். அவற்றுள் சில ‘நீரின் மீது விழும் துகள்கள்,’ ‘நிலவிலிருந்து விழும் பொழிவு’ எனும் பொருள்படும்படியான அழகிய தொடர்களாக இருந்தன.

பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் உள்ள நாடோடி மக்கள் திறந்த மணல்வெளியைக் குறிக்க மட்டும் ஏராளமான சொற்களைக் கொண்டிருந்தனர். மனிதர்களும் விலங்குகளும் அந்த ஒன்றுமற்ற பரந்த மணல்வெளியில் பெறும் அனுபவங்களை குறிக்க அவர்கள் தனித்தனியான சொற்களைப் பயன்படுத்தினர்.

வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் ‘குற்றப் பரம்பரை’ என்று முத்திரை குத்தப்பட்ட அவர்கள் தற்போது டெல்லி நகரத் தெருக்களில் வரைபடங்களை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தங்கள் சமூகம் மீதுள்ள அந்த முத்திரை இன்னும் தொடர்வதால், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க அவர்களுக்குள் ஒரு ‘ரகசிய’ மொழியில் பேசிக்கொள்கின்றனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் அரபிக் கடலை ஒட்டியுள்ள பல கிராமங்களில் வாழும் மக்கள் வழக்கொழிந்த போர்த்துக்கீசிய மொழியைப் பேசுவதைக் கண்டறிந்தார் கணேஷ். அந்த கிராமங்கள் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் இல்லை. தலைநகர் மும்பையில் இருந்து சில மைல் தூரமே இருந்தன.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் வசிக்கும் சில ஒரு குழுவினர், மியான்மரின் பூர்விக மொழிகளில் ஒன்றான காரென் எனும் மொழியைப் பேசினர்.

குஜராத்தில் வாழும் இந்தியர்கள் ஜப்பானிய மொழிகளைப் பேசுவதையும் அவர் கண்டுள்ளார். சுமார் 125 வெளிநாட்டு மொழிகளைத் தங்களின் தாய் மொழிகளாகக் கொண்டுள்ள இந்தியர்களை வர தனது தேடலின்போது சந்தித்துள்ளார்.

பயிற்றுவிக்கப்படாத மொழியியல் வல்லுநரான முனைவர் தேவி, மென்மையாகப் பேசுபவராக இருந்தாலும் மிகவும் மன உறுதி உடையவராக இருக்கிறார். உள்ளூர் பூர்வகுடி மக்களுடன் பணியாற்ற செல்லும்முன், 16 ஆண்டுகாலம் குஜராத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்றுவித்தார்.

அம்மக்கள் கடனுதவி பெறுவது, விதை வங்கி நடத்துவது, அவர்களின் சுகாதார முன்னேற்றம் போன்ற பல துறைகளில் பணியாற்றி வரும் தேவி, 11 மலைவாழ் மொழிகளில் சஞ்சிகை ஒன்றையும் பதிப்பித்துள்ளார்.

அதைப் பதிப்பித்த சமையத்தில்தான் மொழிகளின் வலிமையை அவர் உணர்ந்தார்.

1998-ஆம் ஆண்டு, ஒரு உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட தனது சஞ்சிகை ஒன்றின் 700 பிரதிகளை எடுத்துக்கொண்டு ஒரு ஏழ்மையான கிராமம் ஒன்றுக்குச் சென்றார். அதை விரும்புபவர்கள் அல்லது பிரதி ஒன்றுக்கு 10 ரூபாய் கொடுக்க முடிந்தவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். அந்த நாள் முடிவதற்குள், அவர் கொண்டு சென்ற பிரதிகள் அனைத்தும் முடிந்தன.

அந்தப் பிரதிகள் வைத்திருந்த பையை அவர் பார்த்தபோது அதனுள் பல அழுக்கடைந்த, கசங்கிய, கந்தலான ரூபாய் நோட்டுகள் கிடந்தன. தங்களுக்கு கிடைக்கும் மிகவும் சொற்பமான தினக் கூலியில் அவர்கள் மீதம் வைத்திருந்த பணத்தை அம்மக்கள் அவர்கள் மொழியில் எழுதப்பட்ட ஒரு சஞ்சிகையின் பிரதிகளுக்காக விட்டுச்சென்றிருந்தனர்.

“தங்கள் மொழியில் அவர்கள் பார்த்த முதல் அச்சிடப்பட்ட நூல் அதுவாகத்தான் இருந்திருக்கும். தங்களால் படிக்கக்கூட முடியாத ஒரு பிரதியைப் பெறுவதற்காக, அந்தப் படிப்பறிவில்லாத மக்கள், தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். அவர்களுக்குத் தங்கள் மொழி மீது இருக்கும் பழம்பெருமையையும், மொழிகளின் வலிமையையும் அப்போதுதான் அப்போது நான் உணர்ந்தேன்,” என்று தேவி என்னிடம் கூறினார்.

“தேசிய அளவில் இந்திய மொழிகள் பற்றிய மக்களின் உணர்வுகளை முன்னெடுப்பதற்கான ஒரு உரிமை சார் அமைப்பு” என்று அவர் விவரிக்கும் பீப்பிள்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியா ( People’s Linguistic Survey of India) அமைப்பை அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்.

தனது 60-வது வயதை நிறைவு செய்தபின் இன்னும் நிறைய இந்திய மொழிகளைத் தேடி 18 மாதங்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளில் பயணம் மேற்கொண்டார். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதன்மூலம் கிடைத்த வருவாயில் அந்தப் பயணங்களை மேற்கொண்டார்.

இரவு பகல் பாராமல் பயணித்த அவர் சில இந்திய மாநிலங்களுக்கு 10 முறைகளுக்கும் மேலாகச் சென்றார்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்ற ஆய்வாளர்கள், ஆசிரியர்கள்,செயல்பாட்டாளர்கள், ஓட்டுனர்கள், நாடோடிகள் ஆகியோரைக் கொண்ட 3,500 பேரை உள்ளடக்கிய தன்னார்வலர் குழு ஒன்றையும் அவர் உருவாக்கினார்.

அவர்கள் மக்களிடம் பேசி மொழிகளின் வரலாறு மற்றும் அவை பேசப்படும் நிலப்பரப்புக்குறித்த தகவல்களை சேகரித்து பதிவு செய்தனர். அந்த மொழிகள் பேசப்படும் பிராந்தியங்களின் வரைபடங்களை வரையுமாறு அம்மக்களிடம் அந்தத் தன்னார்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

“பூக்கள், முக்கோணம், வட்டம் போன்ற வடிவங்களில் அம்மக்கள் அவர்கள் மொழிகள் பேசப்படும் பகுதிகளின் வரைபடங்களை வரைந்தனர். அவை அவர்கள் மொழிகள் சென்றடைந்துள்ள தூரம் பற்றிய அவர்களின் கற்பனை, ” என்கிறார் தேவி.

1961-இல் இந்திய அரசு எண்ணிக்கையாக குறிப்பிட்ட 1652 மொழிகளில், 780 மொழிகளை 2011-ஆம் ஆண்டு வாக்கில் பீப்பிள்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியா ஆவணப்படுத்தியது.

அவர்கள் திட்டமிட்ட 100 புத்தங்களில் 39 புத்தகங்கள் அந்த ஆய்வு முடிவுகளை உள்ளடக்கமாகக் கொண்டு பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. 35,000 பக்ககளைக் கொண்ட குறிப்புகள் இன்னும் அச்சில் ஏறாமல் உள்ளன.

அரசின் உதவியின்மை, பேசுபவர்களின் மக்கள் தொகை குறைந்தது, உள்ளூர் மொழிகளில் தரமான ஆரம்பிக்க கல்வி இல்லாதது, பூர்வீக இடங்களில் இருந்து மக்களின் இடப் பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் சில நூறு மொழிகள் அழிந்து போயின.

ஒரு மொழியின் மரணம் கலாசார அவலமாகவும், அதன் இலக்கியம், விளையாட்டு, கதைகள், இசை ஆகியவை அழிவதற்கான குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

அழுத்தம் தரக்கூடிய பல கவலைக்குரிய விடயங்கள் இருப்பதாக முனைவர் தேவி கூறுகிறார். இந்தியாவை ஆளும் இந்து தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் இந்தியைத் திணிக்க முயலும் முயற்சிகள் இந்தியாவின் ‘மொழிகளின் பன்முகத்தன்மை மீதான தாக்குதல்’ என்று அவர் கூறுகிறார்.

பேரினவாத அரசியலுக்கு மத்தியில் இந்தியாவின் பெருநகரங்கள் எவ்வாறு மொழிகளின் பன்முகத்தன்மையைக் கையாளும் என்று கேட்கிறார்.

“ஒவ்வொரு முறையும் ஒரு மொழி மரணமடையும்போது நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அரிசி ரகங்கள், மீன் இனங்கள் உள்ளிட்ட பிற விடயங்களிலும் நாம் பலத்த இழப்புகளை சந்தித்துள்ளோம்,” என்று தனது பூர்விக நகரமான கர்நாடகாவில் உள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க தார்வாத் நகரில் உள்ள தனது வீட்டில் அமர்ந்துகொண்டு அவர் கூறுகிறார்.

“மிகவும் வலிமையுடன் தொடர்ச்சியாக நமது மொழிகள் தாக்குப்பிடித்தன. நாம் உண்மையாகவே ஒரு மொழியியல் ஜனநாயகம் உள்ள நாடு. அந்த ஜனநாயகத்தை உயிப்புடன் வைத்திருக்க நம் மொழிகளை உயிருடன் வைத்திருப்பது அவசியம்,” என்று முடிக்கிறார் கணேஷ் தேவி. -BBC_Tamil

TAGS: