அரசமைப்பு உருவாக்கும் பணியில் சர்வதேசம் நேரடியான பங்களிப்பு

புதிய அரசமைப்பு உருவாக்கும் செயற்பாட்டில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்தின் நேரடி பங்களிப்பு உள்ளமை அம்பலமாகியுள்ளதாக மஹிந்த அணியான பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இலங்கை அரசு உள்நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துகள் அரசியல் நோக்கம் உடையது என்றும், சர்வதேச சட்டத்தை மீறி இலங்கை அரசால் எதனையும் செய்யமுடியாது என்றும் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார் என்று பொது எதிரணி தெரிவித்துள்ளது.

பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து கூறிவரும் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இராணுவத்தினர் மீது சர்வதேசத்தை கைவைக்க விடமாட்டோம். இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க  ஒருபோதும் நாம் அனுமதியளிக்க மாட்டோம் என்று கூறுவது சட்டரீதியாக ஐ.நா. ஏற்றுக்கொள்ளாது. இது அரசியல் ரீதியான கருத்துகள் மாத்திமே.

பிரேஸிலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஆரம்பம் மாத்திரமே. அத்துடன், ஐ.நா. இலங்கைமீது ஐ.நா.வைத்துள்ள நம்பிக்கை சீக்கிரமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கை அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. அரசின் கருத்துகளை தற்போது நம்பமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் நேரடியாக தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

எவ்வாறெனினும் எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு எதிராக பாரதூரமான வழக்குகள் சர்வதேச நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையால் செயற்பட முடியாது. உடனடியாக போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.

இதேவேளை, பப்லோ இலங்கையில் இருந்த தருணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் காரியாலத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஏழு மாதங்கள் கடந்தும் இதற்கு கையொப்பம் இட்டிருக்கவில்லை. பப்லோ போன்று ஐ.நாவின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை வந்து அழுத்தம் கொடுத்திருந்தபோதே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. தற்போது பப்லோவின் அழுத்தத்தின்பேரில் உறுப்பினர் நியமனத்திற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஐ.நாவின் அழுத்தத்தினால்தான்  இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.  ஐ.நாவில் வேறு எந்தவொரு அரசும் பின்பற்றாத கொள்கையை இலங்கை அரசு பின்பற்றியதாலேயே இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

விசேட சட்டங்கள், விசேட நீதிமன்றங்கள் இலங்கையில் உருவாக்கப்பட்டு இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று சர்வதேசத்திடம் கொடுத்திருந்த வாக்குறுதியின் அடிப்படையிலும், 2015ஆம் ஆண்டு பிரிவினைவாதிகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியின் அடிப்படையிலும்தான் தற்போது புதிய அரசமைப்பு உருவாக்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுத்து வருகின்றது.

ஆனால், மஹிந்த அரசு எமது இராணுவத்தினர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று முற்றிலும் மாற்றப்பட்ட கொள்கைகளையே அன்று சர்வதேசத்தில் கடைப்பிடித்திருந்தது.

அரசமைப்பு உருவாக்கும் செயற்பாட்டில் சர்வதேசத்திற்கு நேரடியான பங்களிப்பு உள்ளது. பப்லோ போன்றோரின் கருத்துகள்  இதனையே உறுதிப்படுத்தியுள்ளன். இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கை மீது மூன்றுநாள் விவாதம் நடைபெறவுள்ளது. இன்னமும் அரசமைப்புக்கான ஆரம்பகட்டத்தைக்கூட தாண்டவில்லை என அரசு கூறிவருவது முற்றிலும் பிழையானது. அரசமைப்புக்கான அத்திவாரம் இந்த இடைக்கால அறிக்கையாகும்.

ஒற்றையாட்சியை மாற்றியமைத்தல், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை நீக்கப்படுதல், ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்தல், வடக்கு – கிழக்கு இணைப்பு குறித்து அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. புதிய அரசமைப்புக்குத் தேவையான அனைத்து விடயங்களும் இந்த இடைக்கால அறிக்கையிலேயே உள்ளன” – என்றார்.

-tamilcnn.lk

TAGS: