சுதந்திர குர்திஸ்தான் அமைக்கப் பாடுபட்ட அதிபர் மசூத் பர்சானி பதவி விலகல்

சுதந்திரம் தொடர்பாக குர்திஸ்தான் மற்றும் இராக் இடையே மல்லுக்கட்டு நடந்துவரும் நிலையில், குர்திஸ்தான் அதிபர் மசூத் பர்சானி பதவி விலக உள்ளார்.

அதிபர் மசூத் பர்சானியின் பதவிக்காலம் நான்கு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், தான் பதவி நீட்டிப்பு கோரப் போவதில்லை என குர்திஸ்தான் நாடாளுமன்றத்தில் படித்த கடிதத்தில் பர்சானி கூறியுள்ளார்.

”காலியாக உள்ள பதவியை நிரப்பப் பாராளுமன்றத்தை நான் கேட்கிறேன்” என்று அவர் கூறினார்.

இராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிந்து செல்வதற்கு ஆதரவாகக் கடந்த மாதம் குர்துக்கள் வாக்களித்தனர். ஆனால், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என இராக் மத்திய அரசு தெரிவித்தது.

பிறகு, குர்துக்கள் வசம் இருந்து கிர்குக் நகர் மீது படை எடுத்த இராக் ராணுவம், இப்பகுதியின் வளமிக்க எண்ணெய் வயல்களை கைப்பற்றியது.

 

தான் ஒரு பேஷ்மேர்கா போராளியாகத் தொடர்ந்து இருக்கப்போவதாக கூறியுள்ள மசூத் பர்சானி, “குர்திஸ்தான் மக்களின் சாதனைகளைப் தொடர்ந்து பாதுகாக்க உள்ளேன்” எனவும் கூறியுள்ளார்.

71 வயதான பர்சானியின் கனவான குர்திஸ்தான் சுதந்திரத்திற்கு, இப்பிராந்திய மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்தபோதிலும், பர்சானியின் கனவு சுக்குநூறாகிவிட்டது.

2005-ம் ஆண்டு பதவி ஏற்ற பர்சானி, தன்னாட்சி குர்திஸ்தான் அமைய முக்கிய பங்காற்றியவர்.

கிர்குக் பகுதியை மத்திய இராக் மத்திய அரசிடம் குர்திஸ்தான் பறிகொடுத்த பிறகு, பர்சானி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரின. -BBC_Tamil