கிட் சியாங் கேலாங் பாத்தா தொகுதியிலிருந்து வெளியேறலாம், தகவல்கள் கூறுகின்றன

ஜொகூரில், பிகேஆரின் 3 பாரம்பரிய இடங்களை, கிட் சியாங்கிற்காக டிஏபி குறிவைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அவர் அந்த மூன்று இடங்களையும் கண்காணித்து வருகிறார்,” என்று, பெயர் குறிப்பிட விரும்பாத பக்காத்தான் ஹராப்பான் தலைவர் ஒருவர் பெரித்தா டெய்லிக்குத் தெரிவித்தார்.

“ஆனால், ஜொகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டால், மலாய் வாக்காளர்கள் இடையே இது சிக்கலை உருவாக்கும் என பக்காத்தான் தலைவர்கள் லிம்மிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கேலாங் பாத்தா தொகுதியிலிருந்து வெளியேறினாலும், அவர் ஜொகூரிலேயே இம்முறை போட்டியிடுவார், அம்னோ கோட்டையாக விளங்கும் ஜோகூர் மாநிலத்தை வென்றெடுக்க, பக்காத்தான் ஹராப்பானை வலுப்படுத்த அவர் தேவை என்ற ஊகம் பெருகிவருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், முன்னதாக பிகேஆர் போட்டியிட்ட இடங்களான ஜொகூர் பாரு, தெப்ராவ் மற்றும் பாசீர் கூடாங் தொகுதிகளை டிஏபி குறிவைப்பதாக தகவல்கள் வந்தன.

இதற்கிடையே, ஜொகூர் பாரு, தெப்ராவ் தொகுதிகளில் பிகேஆர் போட்டியிடுவதே நியாயமானது, காரணம் பிகேஆரின் தேர்தல் இயந்திரம் அங்கு கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறது, குறிப்பாக, தெப்ராவ்வில் அதன் தொகுதி தலைவர் ஸ்டீவன் சோங் பல பணிகளை செய்து வருவதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாசீர் கூடாங்கில் பிகேஆர் மாநிலத் தலைவர் போட்டியிடவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கிட் சியாங் ஜொகூர் பாருவில் போட்டியிடுவதை மலாய் வாக்காளர்கள் விரும்பமாட்டார்கள் என்று மற்றுமொருவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில்,14-வது பொதுத் தேர்தலில் , பினாங்கில் போட்டியிடும் வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு லிம் கிட் சியாங் உடன்படவில்லை.

ஜொகூரில் 26 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.  அவற்றுள் 6 தொகுதிகள் தற்போது பக்காத்தான் ஹராப்பான் கைவசம் உள்ளன. முஹிடின் யாசின் (பெர்சத்து – பாகோ) , லிம் கிட் சியாங் (டிஏபி-கேலாங் பாத்தா), ஏர் தெக் ஹுவா (டிஏபி- பக்ரி) , லியு சின் தோங் ( டிஏபி-குளுவாங்) , தியோ நீ சிங் (டிஏபி – கூலாய்) மற்றும் முகமட் இட்ரிஸ் ஜூசி (பிகேஆர்- பத்து பஹாட்) ஆகிய தொகுதிகளில் ஹராப்பான் தலைவர்கள் உள்ளனர்.