“கார்த்திகை 01” மாவீரர் மாத சிறப்பு பதிவு..!

மாவீரர் மண்ணுக்காக மரணித்த மைந்தர்கள். மரணத்திலும் வித்தாகி வாழுகின்ற வீரர்கள். தம் இனத்திற்காக இன்னுயிரை ஈந்த இளவல்கள். வெடிகுண்டு சுமந்தவர்கள். விடியலைத் தேடியவர்கள். வீரத்தின் விளை நிலங்கள்.

எமது தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காக மாவீரர்கள் செய்திட்ட தியாகங்களில் தான் எத்தனை எத்தனை பரிமாணங்கள். விடுதலைப் புலிகளின் வீரவரலாற்றிலே எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக வித்தாகி வீழ்ந்திட்ட மாவீரர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தான் எத்தகைய வித்தியாசமான தியாக விந்தைகள்.

கந்தகப் பொடியைக் கழுத்தில் சுமந்து

கொண்ட கொள்கையில் குறியாய் நின்று

தன்னினத்தின் விடுதலைக்காய் இன்னுயிரை ஈந்தவர் மாவீரர்.

அழிக்க வந்த எதிரியை அடக்கப் போனபோது செய்த தியாகங்கள். உயிருடக் பிடிபடக்கூடாது என்பதற்காக சயனட் அருந்தி சயனித்த தியாகங்கள், வெடி மருந்துடன் எதிரியின் பாசறைக்குள் பாய்ந்து செய்த தியாகங்கள், மூடப்பட்ட முற்றுகைக்குள் முறிந்து போன வில்லுடன் மோதிச் செய்த தியாகங்கள், நாட்டைக் காப்பாற்றுவதற்காக நீரிலும், நிலத்திலும் தாரை வார்த்த தற்கொடைகள் தான் எத்தனை! எத்தனை! உண்மையை விளக்குவதற்கு உரிமையை பெற்றெடுப்பதற்கு உண்ணா நோன்பிருந்தும் உயிர் கொடுத்திட்ட உத்தமர்கள் பற்றியும் உரைத்திட இயலுமோ!

ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு.

சத்திய வேள்வியில் 

தன்னை ஆகுதி ஆக்கி

தன்னின விடுதலைக்கு வித்திட்ட மறவர்களே

மறப்போமா உங்களை.

உமது உறுதி வீண்போகாது.

நம் தேசத்தில் நடமாடும் தெய்வங்களாய், காவலர்களாய், மாவீரர்களாய் இருப்பவர் நீங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளாகிய இந்தப் புனித நன்நாளில் உளமார எம் வீரர்களை நாம் நினைவு கூர்வதானது உணமையில் எமது நெஞ்சைப் புடம் போட உதவுகின்றது. அந்த வீரத் தியாகிகளை எண்ணிப் பார்த்து எமது இதயங்களில் அவர்களை இருத்துகின்றோம். மாவீரர் கனவு நனவாகும். அந்த நிதர்சனத்திற்காக நாமும் எமது பங்கினை ஆற்ற வேண்டும்.

அதி சிறப்பான மானிடர் தொகுதியொன்றுள்ளது. இவர்களுக்கு இறப்பு என்பது என்றுமில்லை. ஏனெனில் இவர்கள் இறந்த பின்பும் வாழ்கின்றார்கள். உலகிலே மனிதர்கள் இறக்கின்றார்கள். தமிழீழத்திலோ மாவீரர்கள் வாழ்கின்றார்கள். இதுவொரு புத்துயிர்ப்பான உன்னதமான ஒரு நெறி. இதனை மீளவும் தனது வரலாற்றுப் பேழையிலிருந்து எமது மண் புதுப்பிக்கின்றது.

கொல்வோரை மோதி கொடு பட்ட இன்னுயிரை 

எல்லா உயிரும் தொழும்.

ஆவி கொடுக்க அசையாத்திடங் கொண்ட மாவீரர் வாழும் மண்.

என்று கவிஞன் முருகையனின் கவிதை வரி சொல்கிறது.

உயிரை உருவி வெளியிலிடுத்து கைகளில் தாங்கி வீரச்சா நேரம் குறித்து இயங்கும் வீரர் உயிரையே ஆயுதமாங்கி களங்களிலே அதியுயர் சாதனைகளைப் படைத்த புலிவீரர்களின் சாதனை கண்டு சர்வதேசமும் நடுங்கி நின்ற காலமும் உண்டு.

எனவே தான் இக்கார்த்திகை மாதம் மாவீரர் காலம். பொழியும் மழைத்துழியும் அவர் முகம் தேடும். எம் கண்ணீர்த்துளிகளும் அவர்களின் கல்லறைகளை நினைத்திடும் காலம்.

வானில் பறக்கும் புள்ளெல்லாம் – நான்

மண்ணில் திரியும் விலங்கெல்லாம் – நான்

தானில் வளரும் மரமெல்லாம் -நான் 

காற்றும் புனலும் கடலும் நானே.

என மாவீரர் இசைக்கும் பாடல் ஒவ்வொரு தமிழ் மகனின் காதிலும் கேட்கிறதா?

போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். போராட்டக் களங்கள் மாறலாம்; ஆனால் தீர்வு என்பது. முடிவு என்பது அது தமிழ் ஈழம் என்ற ஒன்றையே உருவாக்கும்.

-மாவிழி-

-athirvu.com

TAGS: