உத்தர பிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்ததில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

ரேபரேலி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட அதில், மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் உலை ஒன்றில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அங்குள்ள பிரமாண்ட கொதிகலன் (பாய்லர்) நேற்று எதிர்பாராதவிதமாக, பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால், அந்த நேரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலறி அடித்தபடி வெளியே ஓடினர். மின் நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இந்த விபத்தில், 25 தொழிலாளர்கள் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆகியுள்ளது.  முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வெளிநாட்டில் உள்ள நிலையில் துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா ரேபரேலி தொகுதிக்கு இன்று செல்கிறார்.

1,550 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த உலையானது 9 மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்கிறது.  இங்கு 870 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

-dailythanthi.com

TAGS: