வீட்டு பணிப்பெண்கள்: இடைத்தரகர் கொட்டத்திற்கு முடிவு

‘ஞாயிறு நக்கீரன்’,அண்மைக் காலத்தில் தேசிய முன்னணி கூட்டரசு எடுத்த சில நல்ல முடிவுகளில் வீட்டு பணிப்பெண்களை இனி குடும்பப் பொறுப்பாளர்களே நேரடியாக அமர்த்திக் கொள்ளலாம் என்று எடுத்த முடிவு, குறிப்பிடத்தக்க நல்ல முடிவு ஆகும்.

அண்மையில் புத்ரா ஜெயா எடுத்த இந்த முடிவின் பிரதிபலிப்பு தேசிய அளவில் பிரதிபலிப்பதுடன் அயல்நாடுகளிலும் எதிரொலிப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் பணிப்பெண்களை அமர்த்திக் கொள்ள முனைந்தால், அவர்கள் பட வேண்டிய பாடும் தாண்ட வேண்டிய தடையும் ஏராளம்.. ஏராளம்.

தொட்டதற்கெல்லாம் இடைத்தரகர்களை நியமித்து, ஏறக்குறைய அந்தக் கால சிவப்பு நாடா முறையில் நிர்வாகத்தை செலுத்தும் தேசிய முன்னணி அரசில் குடும்ப பணிப்பெண்கள் பிரச்சினையில் ஒரு தீர்வு வராதா என்று ஏங்கித் தவித்த மக்களின் மனதில் தற்பொழுது நிம்மதி பெருமூச்சு எழுகிறது.

பணிப்பெண் வேண்டி பல்லாயிரக் கணக்கில் முகவரிடம் செலுத்திய பின், பல காலம் காத்திருந்த பின் கிடைக்கும் பணிப் பெண்ணை, சம்பந்தப் பட்ட குடும்பத்தின் தலைவியோ, தலைவரோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

மொழி, பண்பாடு, சுகாதாரம், கல்வி, பொது அறிவு, அனுசரணை, குழந்தைகளைப் பராமரிக்கும் பாங்கு உள்ளிட்ட தன்மையும் தகுதியும் அமைந்துள்ளனவா என்றெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து தங்களுக்கு வேண்டிய பணியாளை முடிவு செய்யும் உரிமையோ வாய்ப்போ குடும்பத் தலைவர்களுக்கு இல்லை; இல்லவே இல்லை. ஏதோ எதிர்பாராத விதமாக, சில குடும்பங்களில் நல்ல பணிப்பெண்கள் அமர்த்தப்பட்டதும் உண்டு.

எல்லாத் தடைகளையும் தாண்டி, பொறுமையின் எல்லையும் கடந்து பணிப் பெண் அமர்த்திய பின்னாவது சூழல் சுமூகமாக இருக்குமா என்றால் எதுவும் உறுதியில்லை.  சம்பந்தப்பட்ட பணிப்பெண் பொருத்தமாக இல்லாமல் இருந்தாலோ அல்லது பிடிக்கவில்லை என்றாலோ மாற்றுப் பணியாள் கிடைக்க மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.

மாற்றுப் பணிப்பெண்ணுக்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியே காலத்தைக் கடத்தும் முகவர்களின் தகிடுதத்தம் தெரியாமல் கடைசிவரை காத்திருந்து ஏமாறுவதும் உண்டு. சில வேளைகளில் பணிப் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப் போவதும் உண்டு. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட முகவர் மாற்று ஏற்பாடு செய்தால் உண்டு; கைகழுவினாலும் கேட்க முடியாது.

இவர்களின் நிலைமைதான் இப்படி யென்றால், மறுபக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏதோ ஒரு புது நம்பிக்கை ஒளியை மனதில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து இங்கு வரும் பணிப்பெண்களின் நிலையும் பரிதாபகரமானது.

சில குடும்பங்களின் தலைவரோ அல்லது தலைவியோ மூர்க்கத்தனமாகவும் அரக்கத்தனமாகவும் நடந்து கொள்வதுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படும் பணிப்பெண்களின் நிலை கேள்விக்குறியாகும்; அந்த வேளைகளில் அவர்கள் விபரீதமாக சிந்திக்கவும் மாற்று முடிவை எடுக்கவும்  முற்படுவதுண்டு.

மலேசிய முதலாளிகளிடம் பல்லாயிரக் கணக்கில் வெள்ளியை வசூலித்துக் கொள்ளும் முகவர்கள், பணிப் பெண்களிடம் இருந்தும் அந்தந்த நாட்டு நாணயத்தை ஆயிரக் கணக்கில் கரந்து கொள்வதுண்டு. அவ்வளவு பணம் கட்டி இங்கு வந்து பணியில் அமர்ந்த பின், முதல் இரண்டு மாத ஊதியத்தை முகவர்களே வாங்கிக் கொள்வதுண்டு. விசாவிற்கு, வேலை அனுமதிக்கு, மருத்துப் பரிசோதனைக்கு என்றெல்லாம் அவர்கள் காரணம் சொல்வதுண்டு.

பணிப்பெண்ணுக்காக செலவழிப்பது அந்தந்த குடும்பத்துத் தலைமை; ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு உழைப்பது சம்பந்தப்பட்ட பணிப்பெண். இதில், இடைத்தரகள் உட்புகுந்து கொழுத்துத் திரிவது உள்ளபடியே அதர்மம். குறிப்பாக, இந்தோனேசிய முகவர்கள் இந்த விடயத்தில் அடித்த கொட்டமும் கூத்தும் சொல்லி மாளாது; இதற்கெல்லாம் தூபம் போட்ட வேலையைத்தான் இத்தனைக் காலமும் மலேசிய அரசு செய்து வந்தது.

இதில், அரச அதிகாரிகளும் சளைத்தவர்களில்லை; இடைத்தரகர்களிடம் இருந்து இடையிடையே பிடிங்கி சாப்பிடும் கழுகுகளாக அவர்களும் திரிந்தனர்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதாமாகத்தான், பணிப்பெண்களை  இனிமேல் சம்பந்தப்பட்டவர்களே நேரடியாக நியமித்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. உள்ளபடியே மக்களின் நலம் நாடும் அரசு இப்படித்தான் இருக்க வேண்டும்.